உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அழைப்பு - செந்தில்
செந்தில் தொண்டமானுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அழைப்பு
தமிழர் மேம்பாட்டுப் பணிகளுக்காக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் எடுத்த முக்கிய முடிவு
செந்தில் தொண்டமானுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகராகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு ஆவணஞானி குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்களால் இந்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டது.
உலகளாவிய தமிழர்களை ஒருங்கிணைப்பதையும், தமிழ் மொழி வளர்ச்சியையும், தமிழர் இன முன்னேற்றத்தையும் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த இயக்கம் கடந்த 50 ஆண்டுகளாகத் தொய்வின்றி பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றது.
பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளை நிறுவி, தமிழ்மொழி மற்றும் தமிழர் மேம்பாட்டுக்காகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இவ்வியக்கம் அண்மையில் சென்னையில் தனது பொன்விழாவை கோலாகலமாகக் கொண்டாடியது.
தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர் முன்னேற்றம், குறிப்பாகத் தமிழ்த் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக செந்தில் தொண்டமானும் தொடர்ந்து தொண்டாற்றி வருவதை இயக்கம் பாராட்டியுள்ளது.
இதனால்தான் அவரை காப்பாளராக அழைப்பது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற செயல்வைக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எண்ணற்ற தமிழர்களின் வாழ்வில் ஒளியூட்டிய சாதனைகள் காரணமாக, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராகச் செந்தில் தொண்டமானை வரவேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். “எங்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று, காப்பாளராகச் செயல்பட்டு எங்களை ஆற்றுப்படுத்த வேண்டும்” எனவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|