சித்த மருத்துவம் தேசிய திட்டங்களில் சேர்க்க கோரிக்கை
நீரிழிவு நோயாளிகளுக்கான தேசிய திட்டங்களில் சித்த மருத்துவம் இணைக்க கோரிக்கை
நீரிழிவு நோயாளிகளுக்கான தேசிய சுகாதாரத் திட்டங்களில் சித்த மருத்துவம் சேர்க்க வேண்டும் என கோரிக்கை
நீரிழிவு நோயாளிகளுக்கான தேசிய சுகாதாரத் திட்டங்களில் சித்த மருத்துவத்தையும் இணைக்க வேண்டுமென சித்த மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பேராசிரியர் ரெஸ்னி காசிம் அவர்கள் நீரிழிவு நோயாளிகளின் கால்காயங்கள் புற்றுநோயை விட ஆபத்தானவை என ஊடகங்களுக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து, அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம் அவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில், சித்த மருத்துவத்தில் நீரிழிவு காயங்களுக்கு பல நூற்றாண்டுகளாக பயனுள்ள மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் உள்ளன என்பதையும், அவை பல நோயாளிகளின் உறுப்பை இழப்பிலிருந்து காப்பாற்றியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலிகை மருந்துகள், வெளிச்சிகிச்சைகள், நரம்பு மற்றும் இரத்த ஓட்டக் கோளாறுகளை சரிசெய்யும் பல வழிமுறைகள் மூலம் பல நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் கால் அகற்றப்படாமல் முழுமையாக குணமடைந்துள்ளனர் எனக் கடிதம் வலியுறுத்துகிறது.
மேலும், சித்த மருத்துவ நிபுணர்களும் மேற்கத்திய மருத்துவ நிபுணர்களும் இணைந்து செயல்பட்டால் நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளில் சுமார் 66% பேருக்கு 5 ஆண்டுகளில் மறுமுறை கால்காயங்கள் ஏற்பட்டு, மற்றொரு கால் இழக்கும் அபாயம் இருப்பதால், சிறிய காயங்களிலிருந்தே சித்த சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இலங்கையில் சுமார் 20 இலட்சம் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைந்த (Integrated) சிகிச்சை அணுகுமுறை மூலம் உறுப்புகள் இழக்கும் அபாயத்தை பெரிதும் குறைக்க முடியும் என சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சித்த மருத்துவம் நவீன மருத்துவத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், நீரிழிவு நோயாளிகளுக்கான தேசிய சுகாதாரத் திட்டங்களில் சித்த மருத்துவத்தையும் சேர்க்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், இந்த பிரச்சினை குறித்து மேலும் கலந்துரையாட பேராசிரியர் ரெஸ்னி காசிம் அவர்களுடன் நேரில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், பிரதி சுகாதார அமைச்சர், ஆயுர்வேத ஆணையர் நாயகம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|