இன்று முதல் பொலீத்தீன் பைகளுக்கு கட்டணம் அவசியம்!
இலவசமாக பொலீத்தீன் பைகள் வழங்க தடை – புதிய சட்டம் அமலுக்கு வந்தது
இன்று முதல் ‘பொலீத்தீன்’ பைகளுக்கு பணம் வசூல் கட்டாயம் – புதிய அரச அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது
இன்று நவம்பர் 1 முதல், வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கைப்பிடியுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு (பொதுவாக “பொலீத்தீன் பைகள்” எனப்படும்) கட்டணம் வசூலிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) 2025 அக்டோபர் 1ஆம் திகதி வெளியிட்ட விசேட கெஸட் அறிவிப்பின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பு, நுகர்வோர் விவகார ஆணைய சட்டத்தின் 9ஆம் இலக்கச் சட்டத்தின் பிரிவு 10(l)(b)(ii)க்கு உட்பட்ட அதிகாரத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
அறிவிப்பின்படி, வணிகர்கள் இனி குறைந்த அடர்த்தியுள்ள பொலீத்தீன் (Low-Density Polyethylene – LDPE) அல்லது லினியர் குறைந்த அடர்த்தியுள்ள பொலீத்தீன் (LLDPE) பொருளால் தயாரிக்கப்பட்ட பைகளைக் இலவசமாக வழங்க முடியாது. பைகளின் விலை கடை வளாகத்தில் தெளிவாகக் காட்டப்பட வேண்டும், மேலும் வாடிக்கையாளருக்குக் கொடுக்கப்படும் பில்லிலும் குறிப்பிடப்பட வேண்டும்.
அரச கெஸட் அறிவிப்பில் “பைகள்” என்பது கைப்பிடியுடன் கூடிய எந்த அளவிலான பைகளாக இருந்தாலும் பொருந்தும் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலீத்தீன் பைகளின் பயன்பாட்டை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மத்திய ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் திலக் ஹெவாவஸம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்:
“கைப்பிடியுள்ள பொலீத்தீன் பைகள், அதாவது சிலி சிலி பைகள், இனி இலவசமாக வழங்கப்படக் கூடாது என்று அரச கெஸட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் இந்த நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இனி கடைகள் இலவசமாக பாலிதீன் பைகள் வழங்க முடியாது.”
மேலும் அவர் கூறியதாவது, “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு நுகர்வோரும் கடமை என நினைக்க வேண்டும். பொருட்கள் வாங்கச் செல்லும்போது வீட்டிலிருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப்பைகள் போன்றவற்றை எடுத்துச் செல்வது நல்ல பழக்கமாக மாற வேண்டும்” என்றார்.
இந்த புதிய நடவடிக்கை, இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும், பிளாஸ்டிக் மாசு குறைப்பதற்கும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|