4 மணி நேரத்தில் கடவுச்சீட்டு – இலங்கை குடிவரவு துறை
4 மணி நேரத்தில் கடவுச்சீட்டு பெறலாம் என குடிவரவு துறை அறிவிப்பு
ஒருநாள் சேவையின் கீழ் ஆயிரக்கணக்கான கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன
இனி கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள், ஒருநாள் சேவையின் கீழ் விண்ணப்பித்தால் நான்கு மணி நேரத்திற்குள் தங்களின் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அறிவித்துள்ளது.
இந்த சேவையின் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
ஒருநாள் சேவைக்கு ரூ.20,000 கட்டணமும், வழக்கமான சேவைக்கு ரூ.10,000 கட்டணமும் வசூலிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழில் ஏதேனும் பிழை அல்லது தெளிவின்மை இருந்தால், செயல்முறையில் தாமதம் ஏற்படக்கூடும் என்பதால், விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே தங்களது ஆவணங்களை சரிபார்த்து வருமாறு துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும், 16 வயதில் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் உருவ அமைப்பில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு 10 ஆண்டுகள் மட்டுமே கடவுச்சீட்டு செல்லுபடியாக வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தினசரி சுமார் 4000 முதல் 5000 வரை அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாகவும் குடிவரவு துறை தகவல் வெளியிட்டுள்ளது.