பெண்களின் உரிமை முன்னேற்றத்தில் உறுதியுடன் இலங்கை
பெண்களின் முன்னேற்றத்திற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்திய இலங்கை பிரதமர்
பீஜிங் மாநாட்டில் பேசிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, சமத்துவம் மற்றும் மரியாதைக்கான செயல்பாட்டை வலியுறுத்தினார்
சீனாவின் பீஜிங் நகரில் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற்ற “Women 2025 – உலக தலைவர்களின் மாநாட்டின்” தொடக்க விழாவில் கலந்து கொண்ட இலங்கை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமை, நலன்களை மேம்படுத்தும் இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
பீஜிங்கில் உள்ள சீனா நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் (CNCC) நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சீன அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர் சென்றிருந்தார். அங்கு அவரை சீன அதிபர் சி ஜின்பிங் மற்றும் முதல்தலைவி பெங் லியுவான் வரவேற்றனர்.
தொடக்க விழாவில் பேசிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, 1995ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பெண்கள் மாநாடு மற்றும் பீஜிங் பிளாட்ஃபார்ம் ஒன் ஆக்ஷனின் அடிப்படையில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், பெண்களின் எழுத்தறிவு, தாய்மரணம், வாழ்நாள் நீடிப்பு உள்ளிட்ட துறைகளில் உலகம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் கூறினார்.
எனினும் பெண்களின் வேலைவாய்ப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் அவர்களின் பங்குபெறுதல், உணவு பாதுகாப்பு மற்றும் அரசியல் சமநிலை ஆகிய துறைகளில் இன்னும் பெரிய இடைவெளி நிலவுகிறது என அவர் சுட்டிக்காட்டினார். பெண்களின் முழுமையான முன்னேற்றம் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை தேவைப்படுத்துகிறது என்றார்.
அத்துடன், பெண்களின் தலைமைப் பொறுப்புகள் மற்றும் முடிவெடுப்புகளில் பங்குபெறுதலை அதிகரிக்கும் நோக்கில் தேசிய கொள்கைகள் செயல்படுத்தப்படுவதாகவும், 2023–2027 காலத்திற்கான “பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தேசிய செயல் திட்டம்” CEDAW மற்றும் UNSCR 1325 ஆகியவற்றுடன் இணங்க நடைமுறையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தொழிலாளர் மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களும் நாட்டின் அனைத்து துறைகளிலும் பிரதிநிதித்துவம் பெறுவதை உறுதி செய்வோம் என பிரதமர் தெரிவித்தார். விழாவிற்குப் பின், அதிபர் சி ஜின்பிங் மற்றும் முதல்தலைவி பெங் லியுவான் நடத்திய விருந்திலும் பிரதமர் பங்கேற்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|