உலக ஜனநாயக தரவரிசையில் இலங்கைக்கு 58வது இடம்
2025 ஜனநாயக குறியீட்டில் இலங்கை 58வது இடத்தைப் பிடித்தது
இலங்கையின் தேர்தல் பங்கேற்பு, குடிமக்கள் ஈடுபாடு உயர்ந்ததாக அறிக்கை
உலக ஜனநாயக தரவரிசையில் இலங்கை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஸ்டாக்ஹோமில் அமைந்துள்ள International Institute for Democracy and Electoral Assistance (IDEA) வெளியிட்ட 2025 உலக ஜனநாயக அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட Global State of Democracy 2025 அறிக்கையில், 173 நாடுகளின் ஜனநாயக செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டு, இலங்கை 58வது இடத்தை 0.655 மதிப்பெண்ணுடன் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டைவிட 15 இடங்கள் முன்னேறியுள்ள இலங்கை, போட்ஸ்வானா (20 இடங்கள்) மற்றும் மொரீஷியஸ் (23 இடங்கள்) ஆகியவற்றுக்கு அடுத்த பெரிய முன்னேற்றம் கண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, இலங்கை அனைத்து பிரிவுகளிலும் நடுத்தர அளவிலான செயல்திறனைக் காட்டினாலும், குடிமக்கள் ஈடுபாடு மற்றும் தேர்தல் பங்கேற்பு போன்ற துறைகளில் உலகின் முதல் 25% நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி, கருத்துரிமை, ஊடகச் சுதந்திரம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டாலும், சங்கச் சுதந்திரம் மற்றும் பொதுக் கூட்டச் சுதந்திரம் குறைந்துள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இதேவேளை, தென் ஆசிய நாடுகளில் இந்தியா (73வது இடம்) மற்றும் பாகிஸ்தான் (113வது இடம்) தலா மூன்று இடங்கள் பின்தங்கியுள்ளன. பங்களாதேஷ் 24 இடங்கள் பின்தங்கி 151வது இடத்துக்கு சென்றுள்ளது.
அறிக்கை உலகளவில் 94 நாடுகள் ஜனநாயக குறியீட்டின் குறைந்தது ஒரு பகுதியிலாவது பின்னடைவு கண்டுள்ளன எனவும், மூன்றில் ஒரு பகுதி நாடுகள் மட்டுமே முன்னேற்றம் கண்டுள்ளன எனவும் தெரிவிக்கிறது.
மிகப்பெரிய பின்னடைவுகள் தேர்தல்களின் நம்பகத்தன்மை, நீதி அணுகல் மற்றும் நாடாளுமன்ற செயல்திறன் ஆகிய துறைகளில் பதிவாகியுள்ளன.
பகுதி வாரியாகப் பார்க்கும்போது, ஆப்பிரிக்கா 33% வீழ்ச்சியுடன் முதலிடத்தில் இருந்தது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பா 25% வீழ்ச்சி கண்டது. மேற்கு ஆசியா ஜனநாயக செயல்திறனில் மிகவும் பின்தங்கிய பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்மறை நிலைகளுடன் ஒப்பிடும்போது, போட்ஸ்வானா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் ஜனநாயக தேர்தல்களில் முன்னேற்றம் பெற்று வரலாற்று முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
உலகின் முன்னணி ஜனநாயக நாடுகளில் டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நோர்வே, லக்ஸ்சம்பர்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளும், கோஸ்டா ரிக்கா, சிலி, ஆஸ்திரேலியா ஆகியவை இடம்பிடித்துள்ளன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான், புர்கினா பாசோ, மியான்மார் போன்ற நாடுகள் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. ஆச்சரியமாக தென் கொரியாவும் ஜனநாயக சுதந்திரங்களில் குறைவு கண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
அமெரிக்கா, பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்த OECD நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், ஜனநாயக செயல்திறனில் பல நாடுகளை விட பின்தங்கியுள்ளது.
அறிக்கையின்படி, அமெரிக்கா பிரதிநிதித்துவத்தில் 35வது இடத்திலும் உரிமைகளில் 32வது இடத்திலும் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|