மியான்மர் சைபர் குற்ற வலையில் மீண்டும் இலங்கையர்கள்
வேலை தேடி சுற்றுலா விசாவில் சென்றோர் சைபர் குற்றங்களில் சிக்குண்டனர்
மியான்மர்–தாய்லாந்து எல்லை பகுதியில் ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் சிக்குண்ட இளைஞர்கள்
மியான்மரில் மீண்டும் இலங்கையர்கள் சைபர் குற்றவியல் வலையில் சிக்குண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என இலங்கை வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அறிக்கைகளின்படி, சுற்றுலா விசாவில் வேலை வாய்ப்பு தேடி சென்ற இளைஞர்கள், அங்கு கட்டாயமாக சைபர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் நடைபெறும் பகுதி, மியான்மர்–தாய்லாந்து எல்லை அருகே அமைந்துள்ளது. ‘Cyber Criminal Area’ என்று கூகுள் மேப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பகுதி, மியாவடி (Myawaddy) நகரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தற்போது அந்த பகுதி ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்பும் பல இலங்கையர்கள் இதே பகுதியிலேயே சிக்குண்ட நிலையில், பெரும் முயற்சிகளுக்குப் பிறகு மீட்கப்பட்டிருந்தனர்.
சிறப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்கிற இலங்கை இளைஞர்கள், சுற்றுலா விசாவை பயன்படுத்தி வேலை வாய்ப்பு என்ற பெயரில் இத்தகைய குற்றவியல் வலையில் சிக்குண்டு வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.