ரஷ்ய காம்சட்கா கடற்கரையில் 7.8 ரிக்டர் நிலநடுக்கம்
சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டு பின்னர் ரத்து
காம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்க அதிர்ச்சி
ரஷ்யாவின் தூரக் கிழக்கு காம்சட்கா (Kamchatka) தீபகற்பக் கடற்கரையில் இன்று (செப்டம்பர் 19) அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்து, சில பகுதிகளில் மக்கள் அச்சத்துடன் வெளியே வந்தனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கம் காம்சட்கா தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சட்ஸ்கியிலிருந்து கிழக்கே 128 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
ரஷ்ய புவியியல் சேவைகள் இதன் அளவை 7.4 ரிக்டர் எனக் குறிப்பிட்டதுடன், குறைந்தது ஐந்து பின்அதிர்வுகள் (aftershocks) பதிவாகியுள்ளதாக தெரிவித்தன.
நிலநடுக்கத்துக்குப் பிறகு, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ஆபத்தான அலைகள் எழும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது.
எனினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த அச்சுறுத்தல் நீங்கியதாகவும் சுனாமி அபாயம் இல்லை என்றும் அறிவித்தது.
சம்பவம் குறித்து காம்சட்கா மாகாண ஆளுநர் வ்லாடிமிர் சோலோடோவ், “இந்த காலை மீண்டும் மக்களின் மனோதிடத்தை சோதிக்கிறது.
இதுவரை சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
காம்சட்கா தீபகற்பம் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள “Ring of Fire” எனப்படும் அதிக நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளது.
கடந்த ஜூலையில் இப்பகுதியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தி, கடற்கரை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|