கரூர் துயர வழக்கில் இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு
விஜய் கூட்ட நெரிசல் சம்பவம் – யார் விசாரிக்க வேண்டும் என இன்று தீர்ப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு
கரூரில் தமிழ்நாட்டை அதிர்ச்சியடைய வைத்த கூட்ட நெரிசல் விபத்து தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. கடந்த மாதம் 27 ஆம் திகதி, தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட பெரும் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழகமெங்கும் துயரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வுக்கு பின், சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே விசாரணை எடுத்துக்கொண்டு, மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. ஆனால், தவெக் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாஜக வழக்கறிஞர் தரப்பிலும் சிபிஐ விசாரணை கோரி தனித்தனியான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வில் பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தவெக் தரப்பு, விஜய் மீது உயர்நீதிமன்றம் தேவையில்லாமல் நேரடி விமர்சனங்கள் செய்துள்ளதாக சுட்டிக்காட்டியது. மேலும், நிகழ்வுக்கு உடனே போலீசார் விஜயை அங்கிருந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க தவெக் நிர்வாகிகள் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
அதே சமயம், தவெக் தரப்பு உயர்நீதிமன்றம் அமைத்த குழுவுக்கு பதிலாக, உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “உயர்நீதிமன்றம் தாமாகவே வழக்கை பதிவு செய்து குழுவை அமைத்தது எப்படி?” எனக் கேள்வி எழுப்பினர்.
மற்றொரு தரப்பில், தமிழக அரசு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு திறமையாக விசாரணை நடத்தி வருகிறது. எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை” என்று வாதிட்டார்.
அதே நேரத்தில், பிற வழக்கறிஞர்கள் கூட்ட நெரிசலில் காவல்துறை தடியடி மற்றும் அமைப்பின் அலட்சியம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறினர். இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன், “நிகழ்வின் பொறுப்பை அரசின் மீது சுமத்த முயற்சி நடக்கிறது. கூட்ட நெரிசல் தண்ணீர், உணவு பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டது. விஜய் தாமதமாக வந்தது மட்டுமே காரணம் அல்ல” என்று விளக்கமளித்தார்.
இதையடுத்து, உச்சநீதிமன்றம் அனைத்து தரப்புகளுக்கும் விரிவான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது. இந்நிலையில், இன்று கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் யார் விசாரணை நடத்த வேண்டும் — சிறப்பு புலனாய்வுக் குழுவா அல்லது சிபிஐயா — என்பது குறித்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.
இந்த தீர்ப்பு, தமிழக அரசியல் மற்றும் நிர்வாக துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|