Home>விளையாட்டு>சூர்யகுமார் யாதவ் அப...
விளையாட்டு (கிரிக்கெட்)

சூர்யகுமார் யாதவ் அபராதம் – ICC நடவடிக்கை

byKirthiga|about 1 month ago
சூர்யகுமார் யாதவ் அபராதம் – ICC நடவடிக்கை

பாகிஸ்தான் புகாருக்கு பின் சூர்யகுமார் மீது 30% அபராதம்

இந்தியா–பாகிஸ்தான் மோதலுக்கு பின் சர்ச்சை; ஹாரிஸ் ரவுப்புக்கும் தண்டனை

இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆசியக் கோப்பை 2025 குழு சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக செப்டம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற ஆட்டத்திற்குப் பிறகு வழங்கிய கருத்துக்களைத் தொடர்ந்து, அவரது போட்டிக் கட்டணத்தில் 30 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியதைத் தொடர்ந்து, அந்த வெற்றியை இந்திய பாதுகாப்புப் படையினருக்கும், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் பலியானோரின் குடும்பத்தார்களுக்கும் அர்ப்பணிப்பதாக சூர்யகுமார் தெரிவித்தார்.

இதற்கு பாகிஸ்தான் அணி அதிகாரப்பூர்வ புகார் அளித்தது. பின்னர் ICC போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் தலைமையிலான விசாரணைக்கு பிறகே இறுதி தீர்ப்பு எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு இந்திய அணி மேல்முறையீடு செய்துள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அபராத அறிவிப்பு ஆசியக் கோப்பை இறுதி போட்டிக்குப் பிறகே வெளியாகும் என்றும், தற்போதைய தகவல் தற்காலிகமானது என்றும் ஐசிசி வட்டாரங்கள் கூறியுள்ளன.

மேலும், போட்டியின் மீதியிலான காலத்தில் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடாது என சூர்யகுமாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, ஆசியக் கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப், ஆட்டத்தில் காட்டிய மோசமான நடத்தை காரணமாக தனது போட்டிக் கட்டணத்தில் 30 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

அவரது சக வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், அரைசதம் எடுத்த பின் துப்பாக்கி சுடும் போக்கு கொண்ட கொண்டாட்டம் செய்திருந்த போதிலும், எச்சரிக்கை மட்டுமே வழங்கப்பட்டு, நிதி அபராதம் விதிக்கப்படவில்லை.

இந்த விசாரணை பாகிஸ்தான் அணி தங்கியிருந்த ஹோட்டலில் ரிச்சி ரிச்சர்ட்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஹாரிஸ் ரவுப் மற்றும் ஃபர்ஹான் இருவரும் நேரில் பங்கேற்றதுடன், அவர்கள் எழுத்துமூலம் தங்களது பதில்களையும் வழங்கினர். அப்போது பாகிஸ்தான் அணியின் மேலாளர் நவீத் அக்ரம் சீமா அவர்களும் உடன் இருந்தார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதட்டம் toss நேரத்தில் பாரம்பரிய கைகுலுக்கலை இந்திய வீரர்கள் தவிர்த்ததிலிருந்தே அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், இரு அணி களும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை இறுதியில் மீண்டும் மோதவுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்