Home>சினிமா>கவிஞர் சினேகனின் தந்...
சினிமா

கவிஞர் சினேகனின் தந்தை மறைவு – திரையுலகம் துயரில்

byKirthiga|12 days ago
கவிஞர் சினேகனின் தந்தை மறைவு – திரையுலகம் துயரில்

சினேகனின் தந்தை சிவசங்கு மறைவு – கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்

திரையுலக துயரச் செய்தி: கவிஞர் சினேகனின் தந்தை மறைவு, நாளை நல்லடக்கம்

திரைப்பட பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு 101 வயது ஆகும். நீண்டநாள் உடல்நலக்குறைவால் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான புதுக்கரியப்பட்டியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.

இது தொடர்பாக சினேகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “எனது தந்தையார் இன்று அதிகாலை இயற்கை எய்திவிட்டார். நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் நடைபெறும்,” என பதிவிட்டுள்ளார்.


View this post on Instagram

A post shared by Snekan S (@kavingarsnekan)



இந்த செய்தி வெளிவந்தவுடன், திரையுலகத்தினர், அரசியல் வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் துயரத்தில் மூழ்கினர். பலரும் சமூக ஊடகங்களில் இரங்கல் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், “என்னுடைய அன்புக்குரிய சகோதரரும், எம்.என்.எம் கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான கவிஞர் சினேகனின் தந்தை திரு. சிவசங்கு அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். சினேகன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என பதிவு செய்துள்ளார்.

கவிஞர் சினேகன், 1997ஆம் ஆண்டு வெளியான புத்தம் புது பூவே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பிறகு மனுநீதி, மௌனம் பேசியதே, பாண்டவர் பூமி, பகவதி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

சமீபத்தில் வெளியான திரு. மாணிக்கம் திரைப்படத்திற்கும் அவர் பாடல்கள் எழுதியிருந்தார். அரசியலிலும் ஆர்வம் கொண்ட சினேகன், 2021ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டார்.

சிவசங்கு அவர்களின் மறைவுச் செய்தி தமிழ் திரையுலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்