Home>இலங்கை>மட்டக்களப்பு கலைஞர்க...
இலங்கைசினிமா

மட்டக்களப்பு கலைஞர்களின் 3 படங்கள் ஒரே நாளில் வெளியீடு

byKirthiga|15 days ago
மட்டக்களப்பு கலைஞர்களின் 3 படங்கள் ஒரே நாளில் வெளியீடு

மட்டக்களப்பில் ஒரே நாளில் மூன்று தமிழ் திரைப்படங்கள் வெளியீடு

அன்பின் மினுமினுப்பு, தங்கைக்கோர் கீதம், யாதவின் அன்பின் பாதை – சமூக மாற்றத்தைக் கூறும் திரைப்படங்கள்

மட்டக்களப்பு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட மூன்று தமிழ் திரைப்படங்கள் ஒரே நாளில், ஒரே திரையரங்கில் திரையிடப்படவுள்ளதாக திரைப்பட இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். அன்பின் மினுமினுப்பு, தங்கைக்கோர் கீதம் மற்றும் யாதவின் அன்பின் பாதை எனும் மூன்று திரைப்படங்களும், மட்டக்களப்பு விஜயா திரையரங்கில் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு திரையிடப்படவுள்ளது.

இந்த மூன்று திரைப்படங்களையும் இயக்கியவர்கள் ஜனிதன், கணேசலிங்கம் புஸ்பாகாந்த் மற்றும் ஜனா மோகேந்திரன் ஆகியோர் ஆவர். இணைப்பாளராக வேட்டையன் இம்ரான் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படங்கள் குறித்து இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் குழுவினர் ஊடகங்களுடன் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில், ஈழத்தில் உருவாகும் தமிழ் திரைப்படங்களுக்கும் கலைஞர்களுக்கும் ஊடகங்கள் அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இயக்குநர்கள் முன்வைத்தனர். மேலும், சமூகத்தில் நிலவும் பல்வேறு சவால்கள் மற்றும் உண்மை நிலைகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த மூன்று திரைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இத்திரைப்படங்கள் எந்தவித வர்த்தக நோக்குமின்றி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

யாதவின் அன்பின் பாதை திரைப்படம் சமூகத்தில் விசேட தேவையுடைய நபர் எதிர்நோக்கும் சவால்களை மையப்படுத்தியுள்ளது. அன்பின் மினுமினுப்பு யுத்தகாலத்தில் கணவனை இழந்த பெண் தனது மகளுடன் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களைச் சொல்லும் கதை. தங்கைக்கோர் கீதம் அண்ணன்–தங்கை உறவையும், குடும்பப் பாசத்தையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் வெளிப்படுத்துகிறது.

திரைப்படங்களின் இணைப்பாளரான வேட்டையன் இம்ரான், “ஈழத்தில் தமிழ் சினிமாவைப் பார்க்கும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. மக்கள் சமூக கருத்துகளையும் உண்மை கதைகளையும் விரும்பி ரசிக்கின்றனர். அதனால் வர்த்தக நோக்கிலான படங்களை விட, சமூக மாற்றத்தை நோக்கிய சினிமாவை முன்னிறுத்த முயற்சித்து வருகிறோம்,” என்று தெரிவித்தார்.

அத்துடன், ஈழத்தில் உருவாகும் சினிமாக்களுக்கு ஊடகங்களின் ஆதரவு மிக அவசியமானது என்றும், இவ்வகை படைப்புகளை முன்னெடுத்துச் செல்ல ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்