தங்கத்தை அதிகம் வைத்திருக்கும் 5 நாடுகள்
உலகில் தங்கத்தை அதிகம் வைத்திருக்கும் நாடுகள் எவை தெரியுமா?
உலக தங்க களஞ்சியப் போட்டியில் முன்னிலையில் அமெரிக்கா – இந்தியா 9ஆம் இடத்தில்!
தங்கம் என்பது அழகுக்கும் மதிப்புக்கும் சின்னம் மட்டுமல்ல, ஒரு நாட்டின் பொருளாதார வலிமையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. உலக நாடுகள் தங்கள் நாணய மதிப்பை உறுதியாக வைத்துக்கொள்ளவும், பொருளாதார சிக்கலான நேரங்களில் பாதுகாப்பாக இருக்கவும் தங்கத்தை பெருமளவில் இருப்பில் வைத்திருக்கும். இது பெரும்பாலும் அந்தந்த நாட்டின் மத்திய வங்கி வழியாக சேமித்து வைக்கப்படுகிறது.
தற்போதைய உலகளாவிய கணக்கெடுப்பின் படி, அமெரிக்கா உலகில் தங்கத்தை அதிகமாக வைத்திருக்கும் நாடாக உள்ளது. அந்த நாட்டின் மத்திய வங்கியில் சுமார் 8,133 டன் தங்கம் இருப்பில் உள்ளது. இது உலக தங்க இருப்பில் ஒரு பெரிய பகுதியைத் தனியாகப் பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தில் ஜெர்மனி உள்ளது. அந்நாட்டின் தங்க இருப்பு சுமார் 3,350 டன் ஆகும். ஜெர்மனி இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு தன் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் நோக்கில் பெருமளவில் தங்கத்தை சேமிக்கத் தொடங்கியது.
மூன்றாம் இடத்தை இத்தாலி பெற்றுள்ளது. அந்நாட்டில் 2,452 டன் தங்கம் இருப்பில் உள்ளது. பொருளாதார மாற்றங்களுக்கிடையில் தங்கம் தனது நாணயத்திற்குப் பாதுகாப்பு எனக் கருதி, இத்தாலி அதை பல ஆண்டுகளாக நிலைநிறுத்தி வருகிறது.
நான்காவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. அந்த நாட்டின் மத்திய வங்கியில் சுமார் 2,437 டன் தங்கம் இருப்பில் உள்ளது. பிரான்ஸ் இதனை நீண்டகால முதலீட்டு சொத்தாகக் கருதி பராமரித்து வருகிறது.
ஐந்தாவது இடத்தை சீனா பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, சீனாவில் 2,299 டன் தங்கம் இருப்பில் உள்ளது என கூறப்படுகின்றது. எனினும் பொருளாதார வல்லுனர்கள் கூறுவதாவது, சீனாவில் உண்மையில் இருக்கும் தங்கத்தின் அளவு இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்பதே.
இதற்கிடையில், இந்தியா உலக அளவில் ஒன்பதாவது இடத்தில் தங்க இருப்பைக் கொண்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தற்போது சுமார் 880 டன் தங்கத்தை இருப்பில் வைத்துள்ளது. தங்கத்தின் மதிப்பும் தேவைவும் தொடர்ந்து உயரும் நிலையில், மத்திய அரசு தங்க இருப்பை மேலும் அதிகரிக்கும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறு தங்கம் இன்று உலக பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் தங்க இருப்பு அதிகமானால், அதன் நாணய வலிமையும் சர்வதேச நம்பிக்கையும் அதே அளவில் உயரும் என்பது பொருளாதார நிபுணர்கள் கூறும் கருத்தாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|