H-1B விசா கட்டணம் அதிரடியாக உயர்வு – டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவில் H-1B விசா பெற ஆண்டுக்கு $100,000 கட்டணம் விதிப்பு
H-1B விசா விதிகளில் டிரம்ப் கடும் மாற்றம் – சிறு நிறுவனங்கள் அதிர்ச்சி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டிலிருந்து வரும் திறமைமிக்க தொழிலாளர்களுக்கான H-1B விசா திட்டம் தொடர்பில் புதிய நிர்வாக ஆணையை கையொப்பம் செய்துள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு விண்ணப்பதாரரிடமும் ஆண்டு தோறும் 1 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 3.7 கோடி) கட்டணம் வசூலிக்கப்படும்.
டிரம்ப் வெளியிட்ட உத்தரவில், இந்த திட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கூறி, கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அமெரிக்க நுழைவு மறுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வருகிறது. இது புதிய விண்ணப்பங்களுக்கே பொருந்தும் என்றும், ஒரு நிறுவனமும் ஒரு ஊழியருக்காக 6 ஆண்டுகள் வரை ஒவ்வொரு ஆண்டும் இதே தொகையை செலுத்த வேண்டி வரும் என்றும் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
“ஒரு ஊழியருக்காக வருடத்திற்கு 1 லட்சம் டாலர் செலுத்துவது அந்த நிறுவனத்துக்கு மதிப்புள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும். இல்லையெனில், அமெரிக்காவில் உள்ளவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
H-1B விசா திட்டம்
2004 முதல் ஆண்டுதோறும் 85,000 H-1B விண்ணப்பங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு, இந்த விசா கட்டணங்கள் சுமார் 1,500 டாலருக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், புதிய கட்டண உயர்வால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெரும் சிரமம் உண்டாகும் என்று குடிவரவு சட்ட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாட்சன் குடிவரவு சட்ட நிறுவனத்தின் நிறுவனர் தஹ்மினா வாட்சன், “இந்த 1 லட்சம் டாலர் கட்டணம் பல சிறிய நிறுவனங்களுக்கு கல்லறைக் கல்லாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் கவலை
அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள், மேட்டா, டாடா போன்ற நிறுவனங்களே H-1B திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகள். இந்த புதிய விதியால் அவர்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
அமேசான் ஏற்கனவே தனது H-1B ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி, அமெரிக்காவிற்கு வெளியே உள்ளவர்கள் உடனடியாக திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. திரும்ப முடியாதவர்கள் மேலதிக அறிவிப்பு வரும் வரை அமெரிக்காவிற்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
சிறிய நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப நிபுணர்களை அமெரிக்காவில் எளிதில் பெற முடியாது என்பதால், இந்த புதிய கட்டணம் நாட்டின் போட்டித்திறனை குறைக்கும் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியாவே H-1B விசா விண்ணப்பதாரர்களில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் நாடாக இருப்பதால், அந்நாட்டிலும் பெரும் கவலை நிலவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|