Home>உலகம்>டிரம்ப் - புடின் சந்...
உலகம் (அமெரிக்கா)

டிரம்ப் - புடின் சந்திப்பு ஒத்திவைப்பு

byKirthiga|17 days ago
டிரம்ப் - புடின் சந்திப்பு ஒத்திவைப்பு

உக்ரைனில் உடனடி போர்நிறுத்தம் மறுப்பு – பேச்சுவார்த்தைகளுக்கு மேல் நிழல்

அமெரிக்கா-ரஷ்யா உச்சி மாநாடு தள்ளிவைப்பு – உக்ரைன் போர்நிறுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரிப்பு காரணம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விலாதிமிர் புதின் இடையிலான திட்டமிடப்பட்ட உச்சி மாநாடு செவ்வாய்க்கிழமை தள்ளிவைக்கப்பட்டது. உக்ரைனில் உடனடி போர்நிறுத்தத்தை ரஷ்யா மறுத்திருப்பது, இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை முயற்சிகளில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை இல்லத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்ததாவது, “தற்போது டிரம்ப் மற்றும் புதின் இடையே எந்தவித சந்திப்பு திட்டங்களும் இல்லை” என கூறினார். இதற்கு முன் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ருபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையே “பலனளிக்கும்” தொலைபேசி உரையாடல் நடந்திருந்தாலும், நேரடி சந்திப்பை அவர்கள் தவிர்த்தனர்.

கடந்த வாரம் டிரம்ப், புதினுடன் ஹங்கேரியில் விரைவில் சந்தித்து உக்ரைன் போருக்கு முடிவுகாண முயற்சி செய்வதாக அறிவித்திருந்தார். ஆனால், ரஷ்யா இதுவரை எந்தவித தளர்வையும் காட்டாத நிலையில், போர்நிறுத்தம் குறித்து சமரசம் செய்ய மறுத்துள்ளது. மாஸ்கோ, உக்ரைன் மேலும் நிலப்பகுதிகளை ஒப்புக்கொடுக்காத வரை எந்தவித போர்நிறுத்தமும் நடக்காது என்றே நிலைப்பாடு எடுத்துள்ளது.

பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “வீணான சந்திப்பை நடத்த விருப்பமில்லை” என கூறியபோதும், அடுத்த இரண்டு நாட்களில் புதிய முன்னேற்றங்களை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார்.


Selected image


இதற்கிடையில், ரஷ்ய முதலீட்டு தூதர் கிரில் திமித்ரிவ் தனது சமூக ஊடகப் பதிவில் “உச்சி மாநாடு தயாரிப்புகள் தொடர்கின்றன” என தெரிவித்தார்.

அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது, ரஷ்யா கடந்த வாரம் அனுப்பிய “நான் பேப்பர்” எனப்படும் தனிப்பட்ட ஆவணத்தில் தமது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதில், கிழக்கு டொன்பாஸ் (Donbas) பிரதேசத்தின் முழுமையான கட்டுப்பாட்டை ரஷ்யா கோரியுள்ளது. இதன் மூலம், தற்போதைய முன்நிலைகளில் இருந்து போர்நிறுத்தம் செய்யும் டிரம்பின் கோரிக்கையை ரஷ்யா மறுத்துள்ளது.

ரஷ்யா தற்போது லுகான்ஸ்க் மாகாணத்தை முழுமையாகவும், அண்டை டொனெட்ஸ்க் மாகாணத்தின் சுமார் 75% பகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இதனை முன்னிட்டு, ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்காவை உடனடி போர்நிறுத்தத்தை வலியுறுத்தி உறுதியுடன் நிற்குமாறு கேட்டுக்கொண்டனர். நாட்டு (NATO) செயலாளர் ஜெனரல் மார்க் ரூட்டே செவ்வாய்க்கிழமை வாஷிங்டனுக்குப் பயணித்து டிரம்பை சந்திக்கவுள்ளார்.

மேற்கு நாடுகளின் மூத்த அதிகாரி ஒருவர், ரூட்டே டிரம்பிடம் ஐரோப்பிய நாடுகளின் கருத்தை முன்வைத்து போர்நிறுத்தம் மற்றும் எதிர்கால சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்கவுள்ளார் என தெரிவித்தார்.

கடந்த வாரம் டிரம்ப் புதினுடன் தொலைபேசியில் பேசியதோடு, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் நேரில் சந்தித்திருந்தார். ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் அலாஸ்காவில் நடந்த டிரம்ப்-புதின் உச்சி மாநாடு எந்தவித முக்கிய முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், புதன்கிழமை ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற இருந்த ருபியோ மற்றும் லாவ்ரோவ் இடையிலான முன் தயாரிப்பு சந்திப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லாவ்ரோவ் தெரிவித்ததாவது, “உச்சி மாநாட்டின் இடமும் திகதியும் முக்கியமல்ல, அலாஸ்காவில் அடைந்த புரிதல்களை செயல்படுத்துவதுதான் முக்கியம்” என்றார்.

கிரெம்லின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது, “இன்னும் எந்த தேதியும் உறுதி செய்யப்படவில்லை. உச்சி மாநாட்டிற்கான தீவிரமான தயாரிப்புகள் அவசியம்” எனவும், “இரு அதிபர்களும் இதுவரை துல்லியமான தேதியை அறிவிக்கவில்லை” என்றும் தெரிவித்தார்.

ஒரு ஐரோப்பிய தூதர் தெரிவித்ததாவது, “ரஷ்யா மிகுந்த கோரிக்கைகளை வைத்திருந்தது; இதனால் டிரம்ப் நிர்வாகம் புடாபெஸ்ட் சந்திப்பை தொடர்வதில் தயக்கம் காட்டியது” என கூறினார்.

ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன; டிரம்ப் புதினை மீண்டும் சந்தித்தாலும், எந்தவித தளர்வும் பெற முடியாது என்பதே அவர்களின் அச்சம்.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், “போர்நிறுத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும், தற்போதைய முன்நிலைகளே எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாக இருக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

டிரம்ப் கடந்த வாரம் ஜெலென்ஸ்கியை சந்தித்தபின், தற்போதைய முன்நிலைகளிலிருந்தே போர்நிறுத்தம் ஆரம்பிக்க வேண்டும் என்ற உக்ரைனின் நிலைப்பாட்டை பொதுவாக ஆதரித்திருந்தார்.

அடுத்த சில நாட்களில் ஐரோப்பிய தலைவர்கள் ஜெலென்ஸ்கியை வரவேற்று, போருக்குப் பிந்தைய பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் பற்றி விவாதிக்கவுள்ளனர். அதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புடாபெஸ்ட் நகரம் உச்சி மாநாட்டிற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பான், ரஷ்யாவுடன் நெருங்கிய உறவை பேணும் சில ஐரோப்பிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மேலும், புடாபெஸ்ட் செல்ல ரஷ்ய அதிபர் புதின் ஐரோப்பிய ஒன்றிய வான்வழிகளை கடக்க வேண்டியிருக்கும் நிலையில், போலந்து அவரது விமானத்தை பிடித்து சர்வதேச பிடிவாரண்ட் அடிப்படையில் கைது செய்யத் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது. ஆனால் புல்கேரியா தனது வான்வழியை புதின் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்