திருச்சியில் விஜய் பேசியது என்ன?
கூட்ட நெரிசலால் தாமதம்; மைக்கில் சிக்கல், தொண்டர்கள் அதிருப்தி
“தவெக ஆட்சி வந்தால் சாத்தியமான வாக்குறுதிகள் மட்டுமே” – விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று திருச்சியில் தனது தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்கினார்.
காலை 10.35 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே தொடங்க வேண்டிய பரப்புரை, விமான நிலையத்திலிருந்து இடத்துக்குச் செல்ல கூட்ட நெரிசலால் 5 மணி நேரம் தாமதமானது.
பின்னர் தனது முதலாவது தேர்தல் உரையை தொடங்கியபோது, மைக்கில் ஏற்பட்ட ஆடியோ பிரச்சனையால் அவரது பேச்சு சரியாக கேட்கப்படவில்லை. இதனால், தொண்டர்கள் அதிருப்தியுடன் முழக்கமிட்டனர்.
இந்நிலையில் விஜய் தனது உரையில், “ஜனநாயகப் போருக்கு செல்லும் முன் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். திருச்சி எனது அரசியல் பயணத்தின் தொடக்க இடமாகும்.
பெரியார் வாழ்ந்த மண்ணும், கல்வி மற்றும் மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்ற இடமுமாகும். திருச்சியில் தொடங்கிய அனைத்துமே திருப்புமுனையாக அமைகின்றன” எனக் கூறினார்.
மேலும் திமுக அரசை விமர்சித்த அவர், “சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கில் எந்தவித தளர்வும் இருக்காது.
தவெக ஆட்சி அமைந்தால் நடைமுறைக்கு சாத்தியமானவற்றை மட்டுமே செயல்படுத்துவோம்” என வலியுறுத்தினார்.
இதையடுத்து, திருச்சி மரக்கடை பரப்புரையை நிறைவு செய்த விஜய், அரியலூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகளுக்கான தனது அடுத்தகட்ட தேர்தல் பயணத்திற்குப் புறப்பட்டார்.