பிரிட்டன் திறமையாளர்களுக்கான விசா கட்டண ரத்து திட்டம்
பிரிட்டன்: உலகின் முன்னணி திறமையாளர்களை ஈர்க்க விசா கட்டண ரத்து யோசனை
ஸ்டார்மர் அரசு, உலகளாவிய திறமைசாலிகளுக்கான விசா கட்டணங்களை நீக்கும் ஆலோசனையில்
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், உலகின் சிறந்த திறமையான நிபுணர்களை ஈர்க்கும் நோக்கில் சில விசா கட்டணங்களை ரத்து செய்வதற்கான திட்டங்களை ஆராய்ந்து வருகிறார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செப்டம்பர் 22ஆம் திகதி தெரிவித்துள்ளது.
ஸ்டார்மரின் "குளோபல் டாலண்ட் டாஸ்க் ஃபோர்ஸ்" எனப்படும் குழு, உலகின் சிறந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் டிஜிட்டல் நிபுணர்களை பிரிட்டனுக்கு கொண்டு வருவதற்கான யோசனைகளை வடிவமைத்து வருவதாகவும், இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
உலகின் முன்னணி ஐந்து பல்கலைக்கழகங்களில் படித்தவர்களுக்கும், புகழ்பெற்ற விருதுகளை பெற்றவர்களுக்கும் விசா கட்டணங்களை முழுமையாக நீக்குவது பற்றியும் இந்தக் குழுவில் ஆலோசிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஆலோசனைகள், டிரம்ப் நிர்வாகம் புதிய H-1B விசாக்களுக்கு 100,000 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கும் முடிவை அறிவிப்பதற்கு முன்பே, பிரிட்டனின் நம்பர் 10 மற்றும் நிதியமைச்சகத்தில் நடைபெற்றதாகவும், தற்போது அமெரிக்காவின் கடுமையான நடவடிக்கை, பிரிட்டனின் உயர் தர விசா முறையில் மாற்றங்களை துரிதப்படுத்த ஆதரவாக செயல்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பிரிட்டனின் குளோபல் டாலண்ட் விசா விண்ணப்பக் கட்டணம் 766 பவுண்டுகள் (சுமார் 1,030 அமெரிக்க டாலர்கள்) ஆகும். விண்ணப்பதாரருடன் வரும் துணைவர் மற்றும் குழந்தைகளும் அதே அளவு கட்டணம் செலுத்த வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|