Home>இலங்கை>ஐ.நா மனித உரிமை கவுன...
இலங்கை

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தீர்மானம்!

byKirthiga|about 1 month ago
ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தீர்மானம்!

ஐ.நா அலுவலகத்தின் மண்டேட் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

இலங்கையில் சமரசம், பொறுப்பு, மனித உரிமை நடவடிக்கைகள் குறித்து புதிய தீர்மானம்

இலங்கையில் சமரசம், பொறுப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) தீர்மானம் ஒன்றை ஜெனீவாவில் நிறைவேற்றியுள்ளது.

A/HRC/60/L.1/Rev.1 எனும் தலைப்பில் உள்ள இத்தீர்மானம், வாக்கெடுப்பு இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது மனித உரிமைகள் கவுன்சிலின் 60ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு 22 நாடுகள் இணை ஆதரவாளர்களாக கையொப்பமிட்டுள்ளன. இதன் மூலம், இலங்கையைச் சார்ந்த மனித உரிமைகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் (OHCHR) மண்டேட் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம் படி, “2022 அக்டோபர் 6ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் அடிப்படையில், மனித உரிமைகள் கவுன்சிலால் ஒப்படைக்கப்பட்ட அனைத்து பணிகளையும் தொடர அனுமதிக்கப்படுகிறது. மேலும், 63ஆம் அமர்வில் எழுதப்பட்ட புதுப்பிப்பு அறிக்கையையும், 66ஆம் அமர்வில் முழுமையான முன்னேற்ற அறிக்கையையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் சமர்ப்பிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைவு அக்டோபர் 1ஆம் தேதி ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டது.

இத்தீர்மானத்தின் முக்கிய ஆதரவாளர்களாக ஐக்கிய இராச்சியம், கனடா, மாலாவி, மொண்டேநெக்ரோ மற்றும் வட மாசிடோனியா ஆகிய நாடுகள் உள்ளன. மேலும் பல ஐரோப்பிய நாடுகள் இணை ஆதரவாளர்களாக இணைந்துள்ளன.

இலங்கையைப் பற்றிய தீர்மானத்தை அறிமுகப்படுத்தும் UK Core Group Statement ஐ, உலக வர்த்தக அமைப்பில் (WTO) மற்றும் ஐ.நாவில் ஐக்கிய இராச்சியத்தின் நிரந்தர பிரதிநிதி குமார் ஐயர் வழங்கினார்.

அவர் தனது உரையில், “இலங்கை அரசாங்கம் கடந்த பல ஆண்டுகளாக நீடித்த மனித உரிமை பிரச்சினைகளையும், உள்நாட்டு மோதலால் ஏற்பட்ட ஆழமான காயங்களையும் சரி செய்ய எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. ஆனால் இவ்வடைவுகள் செயல்பாடாக மாற வேண்டும்,” என குறிப்பிட்டார்.

மேலும், Core Group உறுப்பினர்கள் இலங்கை அரசு தமது உறுதிமொழிகளை நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றுமாறு வலியுறுத்தினர்.

இதேவேளை, செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கிய மனித உரிமைகள் கவுன்சிலின் 60ஆவது அமர்வு, அக்டோபர் 8ஆம் திகதி நிறைவடைய உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்