அமெரிக்காவில் விமானம் விபத்து – 3 பேர் பலி
கென்டக்கியில் UPS சரக்கு விமானம் விபத்து – 3 பேர் பலி
லூயிஸ்வில்லில் புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பந்தமாகி வீழ்ந்த UPS விமானம் – 11 பேர் காயம்
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம் லூயிஸ்வில்லில் புறப்பட்ட சில நிமிடங்களில் UPS நிறுவனத்தின் சரக்கு விமானம் தீப்பந்தமாகி விழுந்ததில் குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் என கென்டக்கி மாநில ஆளுநர் ஆன்டி பெஷியர் தெரிவித்துள்ளார்.
“நாம் தற்போது குறைந்தது மூன்று உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளோம். ஆனால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். வீடியோவிலும் புகைப்படங்களிலும் காணப்படும் படி, விபத்து மிகவும் கொடூரமானது,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
UPS நிறுவனத்தின் தகவல்படி, அந்த விமானத்தில் மூன்று குழு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.
பிரபல தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில், புறப்படும் போதே ஒரு சிறகில் தீப்பற்றிய நிலையில் விமானம் பறந்ததும், சில வினாடிகளில் பெரிய தீப்பந்தமாகி தரையிறங்கியதும் காணப்படுகிறது. விமானம் விழுந்ததும் விமான நிலையம் பின்புறத்தில் உள்ள தொழிற்சாலை பகுதிகளில் உள்ள பல கட்டிடங்கள் தீப்பற்றின. கரும்புகை வானத்தை மூடியது.
அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் (FAA) தெரிவித்ததாவது, “UPS விமானம் 2976, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5.15 மணியளவில் லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்தது.” விமானம் ஹவாய் மாநிலத்தின் ஹோனலுலுவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
விபத்துக்குப் பிறகு 8 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளுக்குள் மக்கள் வீட்டுக்குள் தங்குமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
“பலர் காயமடைந்துள்ளனர், மேலும் தீயணைப்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. தயவுசெய்து அந்த பகுதியைத் தவிர்க்கவும்,” என்று லூயிஸ்வில்லின் மேயர் க்ரெய்க் கிரீன்பெர்க் சமூக வலைத்தளத்தில் அறிவித்தார்.
FAA பதிவுகளின்படி, விபத்தில் சிக்கிய MD-11 சரக்கு விமானம் 34 ஆண்டுகள் பழமையானது. மெக்டொனல் டக்ளஸ் நிறுவனத்துடன் இணைந்தபின் அதன் உற்பத்தி நிறுத்திய போயிங் நிறுவனம், இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இரங்கல் தெரிவித்ததுடன், விசாரணைக்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
Flightradar24 தளத்தின் தகவல்படி, இந்த விமானம் UPS நிறுவனத்துடன் 2006 முதல் இயக்கத்தில் இருந்தது. விபத்துக்கு முன் அதே நாளில் லூயிஸ்விலில் இருந்து பால்டிமோருக்கு சென்று மீண்டும் திரும்பியிருந்தது. வழக்கமாக லூயிஸ்விலில் இருந்து ஹோனலுலுவுக்கு பறக்கும் பயணம் சுமார் 8½ மணி நேரம் ஆகும்.
விமானம் 175 அடி உயரத்திற்கு ஏறி, 184 நாட்ஸ் வேகத்தை அடைந்தபின் திடீரென கீழே சரிந்தது என அந்த தளம் தெரிவித்துள்ளது.
UPS நிறுவனம் இதுவரை உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த விவரங்களை உறுதிப்படுத்தவில்லை. அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விபத்து விசாரணையை முன்னெடுக்க இருப்பதாகவும், விசாரணை குழு சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, NTSB விசாரணைகள் 12 முதல் 24 மாதங்கள் வரை எடுக்கும், அதன் பின் காரணங்கள் மற்றும் தடுப்பு பரிந்துரைகள் வெளியிடப்படும்.
UPS நிறுவனத்தின் உலகளாவிய சரக்கு போக்குவரத்து மையமான Worldport அமைந்துள்ள லூயிஸ்வில் விமான நிலையம், இந்த விபத்துக்குப் பிறகு தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த விபத்து UPS நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களான Amazon, Walmart, மற்றும் அமெரிக்க தபால் சேவைக்கு (USPS) பொருள் விநியோகத்தில் தாமதத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|