அமெரிக்காவில் 80,000 விசாக்கள் ரத்து - அரசின் நடவடிக்கை
அமெரிக்கா 80,000 விசாக்களை ரத்து செய்தது
டிரம்ப் அரசின் கடும் குடியேற்ற நடவடிக்கை – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்றதிலிருந்து இதுவரை சுமார் 80,000 குடியேற்றமற்ற (non-immigrant) விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு உயர்நிலை அதிகாரி தெரிவித்துள்ளார்.
டிரம்ப் அரசு பதவியேற்றதிலிருந்து குடியேற்றக் கட்டுப்பாட்டில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, விசா பெற்றிருந்தவர்களையும் உட்பட பல ஆயிரம் குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
விசாக்களை வழங்கும் விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகச் செயல்பாடுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும், கூடுதல் பாதுகாப்பு சோதனைகளும் (expanded screening) மேற்கொள்ளப்படுகின்றன.
அதிகாரிகளின் தகவலின்படி, ரத்து செய்யப்பட்ட விசாக்களில் சுமார் 16,000 விசாக்கள் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் (DUI) குற்றச்சாட்டுடன், 12,000 விசாக்கள் தாக்குதல் (assault) குற்றச்சாட்டுடன், மேலும் 8,000 விசாக்கள் திருட்டு (theft) குற்றச்சாட்டுடன் தொடர்புடையவையாகும்.
இந்த மூன்று குற்றங்களே இந்த ஆண்டில் ரத்து செய்யப்பட்ட விசாக்களின் பாதிக்கு மேல் காரணமாக இருந்ததாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, 6,000 மாணவர் விசாக்கள் சட்டம் மீறல் மற்றும் நீண்டநாள் தங்கியிருத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டதாகவும், அதில் சிலர் தீவிரவாத ஆதரவு (support for terrorism) குற்றச்சாட்டுகளிலும் சிக்கியிருந்ததாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், கடந்த மாதம் சிலர் சார்லி கிர்க் என்ற வலதுசாரி செயற்பாட்டாளரின் படுகொலை குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக குறைந்தது ஆறு பேரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்தது.
மே மாதத்தில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறியதாவது, அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக நூற்றுக்கணக்கானோர், சில ஆயிரம் பேர்வரை, விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தலின் படி, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள், அமெரிக்காவுக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் அல்லது அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு விசா வழங்குவதில் மிகுந்த எச்சரிக்கை காட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகள் கூறுவதாவது, பாலஸ்தீன ஆதரவு கருத்துகள் அல்லது இஸ்ரேலின் காசா போரில் விமர்சனங்கள் தெரிவித்த மாணவர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்குப் கூட விசா ரத்தும் நாடுகடத்தலும் செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகள் கடந்த சில மாதங்களாக உலகளவில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|