Home>உலகம்>அமெரிக்காவில் பெரும்...
உலகம் (அமெரிக்கா)

அமெரிக்காவில் பெரும் விமான தாமதம்!

byKirthiga|about 1 month ago
அமெரிக்காவில் பெரும் விமான தாமதம்!

ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டில் பணியாளர் தட்டுப்பாடு – விமானங்கள் நின்றன!

அரசு முடக்கம் தொடர்கிறது – ஆயிரக்கணக்கான விமானங்கள் பாதிப்பு!

அமெரிக்காவின் பல முக்கிய விமான நிலையங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக விமானங்கள் தாமதமாகி வருகின்றன. ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டு (Air Traffic Control) பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்த பிரச்சனை தீவிரமடைந்துள்ளதாக அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அரசு முடக்கம் ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், நாட்டின் பல விமான நிலையங்களில் பணியாளர் தட்டுப்பாடு காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. இதில் ஹூஸ்டன், நாஷ்வில், டல்லஸ், சிகாகோ ஓ’ஹேர் மற்றும் நியூஆர்க் உள்ளிட்ட விமான நிலையங்கள் அடங்குகின்றன.

சிகாகோ ஓ’ஹேர் விமான நிலையத்தில், பணியாளர் பற்றாக்குறையால் ஒரு மணிநேரத்தில் அனுமதிக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் சராசரியாக 41 நிமிட தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், அட்லாண்டா ஏர் ரோட் டிராஃபிக் கட்டுப்பாட்டு மையத்திலும் பணியாளர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது.

நியூஆர்க் விமான நிலையத்திற்குச் செல்லும் விமானங்கள் 30 நிமிடங்கள் வரை தரையில் தங்கவைக்கப்பட்டுள்ளன. வாஷிங்டன் ரீகன் விமான நிலையத்திலும் செவ்வாய்க்கிழமை புதிய தாமதங்கள் ஏற்படக்கூடும் என FAA எச்சரித்துள்ளது.

நாஷ்வில் ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டு மையம் கடுமையான பணியாளர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால் இன்று இரவு முதல் அங்குள்ள பணிகளை மெம்பிஸ் மையம் பொறுப்பேற்கும் என FAA தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையால் அரசியல் தகராறு மேலும் தீவிரமடைந்துள்ளது. வெள்ளை மாளிகை பேச்சாளர் கரோலைன் லெவிட், இந்த பிரச்சனைக்கு டெமோக்ராட்கள் காரணம் என குற்றம் சாட்டினார். அதேசமயம், கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், இதற்குக் காரணம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் என கூறினார்.

மேலும், கடுமையான வானிலை காரணமாகவும் பல இடங்களில் விமானங்கள் தாமதமாகியுள்ளன.

தற்போது 13,000 ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 50,000 போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் சம்பளம் இன்றி பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அக்டோபர் 14 வரை பகுதி சம்பளமே பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து செயலாளர் சான் டஃபி கூறியதாவது: “கட்டுப்பாட்டாளர்கள் இல்லையெனில், நாங்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்துவோம். அதற்காக விமான போக்குவரத்தை மந்தமாக்க வேண்டியிருக்கும். சில இடங்களில் 50% பணியாளர் குறைந்துள்ளனர்,” என்றார்.

விமானங்கள் கண்காணிக்கும் FlightAware இணையதளத்தின் தரவின்படி, செவ்வாய்க்கிழமை மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளன. நாஷ்விலில் மட்டும் 225 விமானங்கள் (20%) தாமதமடைந்துள்ளன. சிகாகோ ஓ’ஹேரில் 570-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

2019ம் ஆண்டில் நடந்த 35 நாட்கள் நீண்ட அரசாங்க முடக்கத்தின் போதும் இதேபோல் பணியாளர்கள் சம்பளம் பெறாததால் வேலைக்கு வராமல் இருந்தனர். இதனால் நியூயார்க் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறை கடந்த ஒரு தசாப்தமாக நீடித்து வருகிறது. தற்போது FAA இலக்கு நிர்ணயத்துடன் ஒப்பிடுகையில் 3,500 பணியாளர் குறைவாகவே உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்