Home>உலகம்>டிரம்ப் அரசின் அதிரட...
உலகம் (அமெரிக்கா)

டிரம்ப் அரசின் அதிரடி - மாணவர் விசா வழங்கல் குறைவு

byKirthiga|about 1 month ago
டிரம்ப் அரசின் அதிரடி - மாணவர் விசா வழங்கல் குறைவு

இந்தியாவை முந்தி சீனா முதல் இடம் – இந்திய மாணவர்களுக்கு 44% வீசா வீழ்ச்சி

மார்கோ ரூபியோ உத்தரவால் ஆயிரக்கணக்கான வீசாக்கள் ரத்து – முஸ்லிம் நாடுகளும் பாதிப்பு

அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாணவர் வீசா வழங்கலில் 19 சதவீதம் குறைந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசின் கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகளின் விளைவாகும். குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வீசாக்கள் கடந்த ஆண்டைவிட 44.5 சதவீதம் குறைந்துள்ளன.

இண்டர்நேஷனல் ட்ரேட் கமிஷன் வெளியிட்ட தகவலின்படி, 2025 ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா மொத்தம் 3,13,138 மாணவர் வீசாக்களை வழங்கியுள்ளது. இது 2024ஆம் ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடும் போது 19.1 சதவீதம் குறைவாகும். அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் ஆகஸ்ட் மாதத்திலேயே புதிய கல்வியாண்டை தொடங்குவதால், இக்குறைவு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு அதிக மாணவர்களை அனுப்பிய நாடாக இருந்த நிலையில், இவ்வாண்டு அந்த இடத்தை சீனா பிடித்துள்ளது. சீன மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வீசாக்கள் 86,647 என பதிவாகியுள்ளன — இது இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட எண்ணிக்கையின் இரட்டிப்பு ஆகும்.

மாணவர் வீசாக்கள் வழங்கலில் ஏற்பட்ட இவ்விழ்ச்சிக்கான முக்கிய காரணமாக டிரம்ப் அரசின் புதிய விசாரணை நடைமுறைகள் குறிப்பிடப்படுகின்றன. வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த ஜூன் மாதத்தில் மாணவர் வீசா செயல்முறையை தற்காலிகமாக நிறுத்தி, விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகங்களை (Social Media) ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதன் பின்னர் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வீசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இஸ்ரேல் தொடர்பான விமர்சனங்கள் உள்ளிட்ட அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததற்காக மாணவர்களுக்கு நுழைவு மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மாணவர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில், டிரம்ப் நிர்வாகம் வீசா விண்ணப்பங்கள் அவர்களின் சொந்த நாட்டிலுள்ள தூதரகங்களிலேயே செய்ய வேண்டும் என கடுமையான விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இந்தியாவுக்கு விதித்துள்ள புதிய H-1B வீசா கட்டண உயர்வும் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் டிரம்ப், சீன மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இது இந்தியாவை எதிர்கொள்ளும் அரசியல் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

முஸ்லிம் பெரும்பான்மையுள்ள நாடுகளிலும் மாணவர் வீசாக்கள் கடுமையாக குறைந்துள்ளன. குறிப்பாக ஈரான் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் மாணவர்களின் வீசா வழங்கல் 86 சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறு, டிரம்ப் அரசின் புதிய கொள்கைகள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் சேர்க்கையை தீவிரமாக பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்