புவாலாய் புயல்: வியட்நாமில் அவசர வெளியேற்றம்
வியட்நாம் புவாலாய் புயல் எச்சரிக்கை – விமான நிலையங்கள் மூடப்பட்டன
புவாலாய் புயல் தாக்கம்: 15,000 பேர் வெளியேற்றம், விமான போக்குவரத்து பாதிப்பு
வியட்நாம் நாட்டில் பல பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியும், பல விமான நிலையங்களை மூடியும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காரணம், அதிவேகமாக நகர்ந்து வரும் புவாலாய் புயல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) வியட்நாமை நோக்கி மோதவிருக்கிறது.
சில நாட்களுக்கு முன் பிலிப்பைன்ஸில் குறைந்தது 10 பேரின் உயிரிழப்புக்கும், பரவலான வெள்ளப் பேரழிவுக்கும் காரணமான இந்த புயல், தற்போது மணிக்கு 133 கிமீ வேகத்தில் வீசுவதாகவும், மத்திய வியட்நாமை எதிர்பார்த்ததைவிட வேகமாக அடையப்போகிறது எனவும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“இது சாதாரண புயல்களை விட இரட்டிப்பு வேகத்துடன் நகரும் புயல். மிகுந்த வலிமை கொண்ட காற்று, கனமழை, வெள்ளம், திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, கடலோரப் பெருக்கு போன்ற பல இயற்கை பேரழிவுகளை ஒரே நேரத்தில் உண்டாக்கும் அபாயம் உண்டு” என்று வானிலைத் துறை எச்சரித்துள்ளது.
ஹா தின் மாகாணத்தில் மட்டும் 15,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான படையினர் தயாராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
வியட்நாமின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, டா நாங் உள்ளிட்ட நான்கு கடலோர விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல விமானங்களின் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஹ்யூ, குவாங் ட்ரி மாகாணங்களில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தெற்கு சீனக் கடலுக்கு எதிரே நீண்ட கடற்கரை கொண்ட வியட்நாம், புயல்களுக்கு அடிக்கடி ஆளாகிறது. கடந்த ஆண்டு யாகி புயல் சுமார் 300 பேரின் உயிரிழப்புக்கும், 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதத்திற்கும் காரணமாக இருந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|