பிரச்சாரம் கட்டுப்பாட்டுடன் நடந்தது - தவெக தரப்பு வாதம்
"விஜய் மீது தவறான குற்றச்சாட்டுகள்" – உச்ச நீதிமன்றத்தில் வாதம்
“விஜயின் பிரச்சாரம் அரசின் கட்டுப்பாடுகளுக்குள் நடந்தது” – உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பின் வாதம்
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், “விஜயின் பிரச்சாரம் அரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் மட்டுமே நடைபெற்றது” என தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
கடந்த 27 ஆம் திகதி கரூரில் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று நடைபெற்ற விசாரணையில், நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. தவெக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம் மற்றும் அரியமா சுந்தரம் ஆகியோர் வாதம் நடத்தினர்.
வாதத்தின் போது, “விஜயின் பிரச்சாரம் அரசின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. கூட்டத்தின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகாரிகளின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்வின் பின் விஜய் தப்பித்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது; காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் அறிவுறுத்திய வழியில்தான் அவர் இடத்தை விட்டு வெளியேறினார்” என தெரிவித்தனர்.
மேலும், விஜய் இவ்வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாதபோதிலும், சென்னை உயர்நீதிமன்றம் அவரை நேரடியாக விமர்சித்திருப்பது சட்டரீதியாக பொருத்தமற்றது எனவும் தவெக தரப்பு வாதித்தது.
இதுகுறித்து நீதிபதிகள், “இந்த வழக்கு மதுரை கிளையின் விசாரணை வரம்புக்குள் வரும் போது, எப்படி சென்னையில் விசாரணைக்கு எடுத்தனர்?” என கேள்வி எழுப்பினர். அதற்கு அரியமா சுந்தரம் பதிலளிக்கையில், “இத்தகைய வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதியின் அனுமதி அவசியம், ஆனால் இந்த வழக்கில் அத்தகைய அனுமதி எடுக்கப்படவில்லை” என்றார்.
மேலும், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சில காணொளி காட்சிகள் இருந்தபோதிலும், அதனை ஆதாரமாகக் கொண்டு விஜயை குற்றம் சாட்டுவது சட்ட ரீதியாக பொருத்தமற்றது எனவும் தவெக தரப்பு வலியுறுத்தியது.
இவ்வழக்கு மீதான விசாரணை தொடரும் நிலையில், உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|