Home>இந்தியா>முதல்வர் வேட்பாளர் வ...
இந்தியாஅரசியல்

முதல்வர் வேட்பாளர் விஜய் – தவெக தீர்மானம்

byKirthiga|3 days ago
முதல்வர் வேட்பாளர் விஜய் – தவெக தீர்மானம்

12 முக்கிய தீர்மானங்கள் – முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு

தவெக சிறப்பு பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற விஜயின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, கட்சியின் நடவடிக்கைகள் சில நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் கட்சி செயல்பாடுகள் முழு தீவிரத்துடன் தொடங்கின.

இந்த சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் 2,000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முக்கியமான 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதலில், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக விஜயை நியமிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், கூட்டணி மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் விஜய்க்கு வழங்கப்பட்டது.

அத்துடன், கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானமும், பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசை வலியுறுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழகமும் புதுச்சேரியும் சேர்ந்த 35 மீனவர்கள் வெளிநாட்டில் கைதானதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழக வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள பிழைகள் மற்றும் அரசியல் நோக்குடன் நடைபெறும் திருத்தப் பணிகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் நெல் கொள்முதல் தாமதம் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு ஆட்சியாளர்களே பொறுப்பென குறிப்பிடப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும் எனவும், ராம்சர் சதுப்பு நிலத்தில் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கட்டுமான அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கழகத் தலைவர் விஜயின் பொதுமக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்வுகளில் பாதுகாப்பு வழங்க அரசு கடமைப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதேபோல், தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது அரசியல் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்புவோரை கண்டித்தும், தமிழக அரசிடம் தொழில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு விவரங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிகாரத்தின் தவறான பயன்பாட்டால் பொதுமக்களின் கருத்துரிமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனநாயக மதிப்புகள் சிதைக்கப்படுவதாகவும் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டம் தவெக அரசியல் திசையை உறுதிப்படுத்தும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. 2026 தேர்தலை முன்னிட்டு, விஜய் தலைமையிலான தவெக எதிர்கால அரசியல் திட்டங்களை தீவிரமாகத் தயாரித்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்