ரூ.15 கோடிக்கு விற்கப்பட்ட மீன் - அதன் சிறப்பு என்ன?
ஒரே இனப்பெருக்கத்தில் 10 லட்சம் முட்டைகள் இடும் மீன்
கோடிக்கணக்கில் விற்கப்படும் கொய் மீன் – உலகின் விலையுயர்ந்த மீன்!
உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு விலங்குகளை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். ஆனால் அதற்காக கோடிக்கணக்கான தொகையை செலவழிப்பது சாதாரணம் அல்ல. ஆனால் ஜப்பானில் நடைபெற்ற ஓர் ஏல விற்பனையில் ஒரு மீன் ரூ.15.5 கோடிக்கு விற்பனையான செய்தி, உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
உலகின் விலையுயர்ந்த செல்லப்பிராணி மீனாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மீனும் கொய் மீன் (Koi Fish) தான்.
ரூ.15 கோடிக்கு விற்கப்பட்ட மீன்
இந்த மீன்கள் சிவப்பு மற்றும் வெள்ளை போன்ற அழகிய வண்ணங்களால் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால் இவை வெறும் அழகுக்கே அல்ல, வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் நீண்ட ஆயுளுக்காகவும் புகழ்பெற்றவை.
கொய் மீன்கள் பொதுவாக 25 முதல் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழும். சிறந்த பண்ணைகளில் வளர்க்கப்பட்ட கொய் மீன்கள், ஏலங்களில் சதவீதம் கணக்கில் உயர்ந்த விலைக்கு விற்கப்படுகின்றன.
2018ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த ஒரு ஏலத்தில் 'S Legend' என அழைக்கப்பட்ட பெண் கொய் மீன், சுமார் 1.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. இந்த மீனை ஹங்கொங்கைச் சேர்ந்த கொய் ஆர்வலர் யிங் யிங் சுங் (Ying Ying Chung) வாங்கினார்.
சுமார் 39 அங்குல அளவுள்ள இந்த பெண் மீன், ஹிரோஷிமா நகரத்தில் உள்ள சகாய் மீன் பண்ணையில் வளர்க்கப்பட்டது. இதன் வளர்ப்பாளராக கென்டாரோ சகாய் இருந்தார்.
இந்த ஏல விலைக்கு ஒரு முக்கிய காரணம் – இந்த மீன் ஒரே இனப்பெருக்க காலத்தில் 10,00,000 முட்டைகள் வரை இடும் திறன் கொண்டது. மேலும் இது கோஹாகு (Kohaku) வகையைச் சேர்ந்தது. இவைகள் 50 அங்குலம் வரை வளரக்கூடியதாகவும், பெரிதாக வளரும்போது அதன் விலை அதிகரிப்பதாகவும் கருதப்படுகிறது.
பெண் கொய் மீன்கள் ஆண்களை விட அதிக மதிப்புடையவை என்பதும் முக்கியமானது. ஏனெனில் அவை சிறந்த உடல் வடிவத்துடன் நிற வண்ணத்தையும் நிரந்தரமாக தக்கவைக்கும் திறனும் பெற்றுள்ளன.
இந்த மிக விலையுயர்ந்த மீன், வெறும் சில மாதங்களுக்குப் பிறகு, 2019இல் உயிரிழந்தது என்பது வருத்தமளிக்கும் செய்தி. இருப்பினும், இந்த 'S Legend' மீன் மீதான ஏல ஆர்வம், கொய் மீன்களின் உலகளாவிய மதிப்பையும் செல்வாக்கையும் உலகிற்கு எடுத்துக் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.