குணா படத்தில் வரும் குகையை நாம் ஏன் பார்க்க முடியாது?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது.
மறைந்துபோன குணா குகை.. ஏன் இன்று சுற்றுலா தளமல்ல?
கொடைக்கானலில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குணா குகை என்பது ஒரு காலத்தில் சுற்றுலா பயணிகளால் பெரிதும் பாராட்டப்பட்ட, மர்மமயமான இயற்கை அமைப்பாக இருந்தது.
'குணா குகை' என அனைவராலும் அறியப்படும் இந்த இடம், உண்மையில் பண்டைய பெயராக 'டெவில்ஸ் கிச்சன்' என அழைக்கப்பட்டது. ஆழமான குகை வடிவத்தில் காணப்படும் இந்த இடம், வியப்பூட்டும் அமைப்புக்காகவே அந்தப் பெயரை பெற்றதாக கூறப்படுகிறது.
குணா படத்தில் வரும் குணா குகை
இந்த குகையை முதன்முதலில் 1821ஆம் ஆண்டு அமெரிக்கரும், ஆர்வலருமான பி.எஸ். வார்டு என்பவர் கண்டுபிடித்ததாக வரலாறு கூறுகிறது. மேலும் இந்து புராணங்களில் கூட, பாண்டவர்கள் குகைகளில் தங்கி உணவு சமைத்ததாக சுட்டிக் காணப்படுகிறது. ஆயினும், இந்த இடம் பெரிதாக பிரபலமடைந்தது 1992ஆம் ஆண்டு வெளியாகிய கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படத்திற்குப் பிறகுதான்.
"கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே…" எனும் பாடல் காட்சி இந்தக் குகையில் படம் பிடிக்கப்பட்டது. அதன் பின்னர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த இடம், “குணா குகை” எனவே பொதுமக்களால் அழைக்கத் தொடங்கப்பட்டது.
பின்னர், இந்த குகையை பார்வையிட சுற்றுலா பயணிகள் பெருமளவில் வர ஆரம்பித்தனர். ஆனால், இந்த குகை ஆழமான பள்ளத்தாக்கு போன்ற அமைப்பை கொண்டது என்பதால், பலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் குகைக்குள் செல்ல முயற்சி செய்ததில், பல துயர சம்பவங்களும் நிகழ்ந்தன. பலர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் அதிகரித்ததைக் காரணமாகக் கொண்டு, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குகை சுற்றுலா பயணிகளுக்கு மூடப்பட்டது.
அதன்பின் சுற்றுலா ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் மரப்பாலம் ஒன்றை அமைத்தனர். இதன் மூலம் பயணிகள் குகையின் முகப்பு வரை பாதுகாப்புடன் சென்று பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இந்த மரப்பாலமும் சிதிலமடைந்து, தற்போது அந்த இடத்தை அணுக முடியாத நிலை உருவாகியுள்ளது.
இப்போது அந்த இடத்தைப் பார்க்கும் ஒரே வழி – அருகில் இருந்து கண்ணால் பார்வையிடுவதுதான். பயணிகள் பனிமூட்டம் மற்றும் பாறைகளின் இடையிலிருந்து குகையை தொலைவில் இருந்து காண்கிறார்கள். பசுமை, இயற்கை அழகு மற்றும் கலை சினிமாவின் நினைவுகள் கலந்த இந்த குகை, தற்போது ஒரு தொலைதூர பார்வை இடமாக மட்டுமே மாறியுள்ளது.
குணா குகை இன்று சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இல்ல, பாதுகாப்பு விழிப்புணர்வின் முக்கிய அடையாளமாகவும் நின்று கொண்டிருக்கிறது.