இலங்கையின் பொருளாதார வளர்ச்சி - உலக வங்கி கணிப்பு
வறுமை இருமடங்காகவே உள்ளது - மக்கள் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் இல்லை
அரசுச் செலவினங்கள் 80% ஊதியம், நலத்திட்டங்கள், வட்டி கட்டணம் - குறைந்த நிதி
இலங்கையின் சமீபத்திய பொருளாதார முன்னேற்றம் உற்சாகமளிப்பதாக இருந்தாலும், அதன் மீட்பு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என உலக வங்கி புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி இன்னும் நெருக்கடி முன்பிருந்த நிலையை அடையவில்லை என்றும் வறுமை அளவு பெரிதாகவே தொடர்கிறது என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
இன்று (07) வெளியிடப்பட்ட “Better Spending for All” எனும் Sri Lanka Development Update அறிக்கையில், இலங்கை பொருளாதாரம் 2025ஆம் ஆண்டில் 4.6 சதவீதம் வளர்ச்சி பெறும் என உலக வங்கி கணித்துள்ளது. தொழில் துறையில் மீள்பிறப்பு மற்றும் சேவைத் துறையில் நிலையான வளர்ச்சி இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால் 2026ஆம் ஆண்டில் வளர்ச்சி 3.5 சதவீதமாக குறையும் வாய்ப்பும் உள்ளது. உலகளாவிய பொருளாதார அச்சங்கள் இதற்குக் காரணமாக குறிப்பிடப்படுகின்றன.
மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கு பொறுப்பான உலக வங்கியின் பிரிவு இயக்குநர் டேவிட் சிஸ்லென் கூறியதாவது: “இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், மீட்பு சமமாகவோ முழுமையாகவோ இல்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் நன்மை செய்யக்கூடிய வலுவான, நியாயமான பொருளாதாரத்தை உருவாக்க, தனியார் துறை முதலீடு செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவசியம். அதேபோல், ஒவ்வொரு ரூபாவும் பயனுள்ள வகையில் அரசால் செலவிடப்பட வேண்டும்” என்றார்.
அறிக்கையின் படி, தற்போதைய பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தாலும், உணவுப் பொருட்களின் விலை இன்னும் உயர் நிலையில் உள்ளது. வெளிநாட்டு நிதி நுழைவுகள் அதிகரித்தாலும், நாணய கையிருப்பு சேகரிப்பு மந்தமாகியுள்ளது.
இலங்கையின் மொத்த உற்பத்தி மதிப்பு இன்னும் 2018இன் நிலைக்கு அடையவில்லை. வறுமை குறைந்தாலும், 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அது இன்னும் இருமடங்காகவே உள்ளது. வேலைவாய்ப்புத் துறையும் முழுமையாக மீளவில்லை, பல குடும்பங்கள் இன்னும் நெருக்கடி காலத்தில் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டுக்கொள்ளவில்லை. மேலும், மக்கள் தொகையின் 10 சதவீதம் வறுமைக் கோட்டிற்கு மேலேயே வாழ்கின்றனர், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு இன்னும் பெரும் பிரச்சினையாக உள்ளது.
நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்கவும் வறுமையை குறைக்கவும், உலக வங்கி தனியார் துறையின் முன்னணியில் இயங்கும் வளர்ச்சிக்கான விரிவான சீர்திருத்தங்களை பரிந்துரைக்கிறது. முக்கியமான பரிந்துரைகளில் வாணிப தடைகளை குறைப்பது, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது, வரிவிதிப்பு முறைமைகளை நவீனப்படுத்துவது மற்றும் நிலம், தொழிலாளர் சந்தைச் சட்டங்களை திருத்துவது ஆகியவை அடங்கும்.
அதே நேரத்தில், அரசின் செலவின முறைகள் குறித்தும் அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது. அரசின் மொத்த செலவினங்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டது ஊழியர்களின் சம்பளம், நலத்திட்டங்கள் மற்றும் கடன்வட்டி செலுத்தலுக்காகவே செலவாகி வருவதாக உலக வங்கி கூறுகிறது. இதனால் அடிப்படை வளர்ச்சிக்கான கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதார முதலீடுகளுக்கான நிதி குறைந்துள்ளது.
இதனை சரிசெய்ய, உலக வங்கி அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பை நியாயமாக மாற்றவும், ஊதிய மேலாண்மை முறைகளை நவீனப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது. மேலும், அரசின் மூலதன முதலீடுகள் முக்கியமான கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், திட்டமிடல், மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு முறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இது South Asia Development Update எனும் உலக வங்கியின் இருவார ஆண்டறிக்கையின் துணை அறிக்கையாகும். இந்த ஆண்டு அக்டோபர் பதிப்பு “Jobs, AI, and Trade” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டு, தென்னாசியாவின் பொருளாதார வளர்ச்சி 2025இல் 6.6 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்காலத்தில் வளர்ச்சி மந்தமடையும் ஆபத்து இருப்பதாகவும், வணிக திறப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் அறிக்கை குறிப்பிடுகிறது.