ஆபத்தான தேவாலயம் - எத்தியோப்பியாவின் அபுனா யெமாதா
எத்தியோப்பியாவில் உலகிலேயே ஆபத்தான 'சர்ச்' : கதை தெரியுமா?
2500 அடி உயர மலை உச்சியில் கட்டப்பட்ட எத்தியோப்பியாவின் அபுனா யெமாதா தேவாலயம்
உலகிலேயே மிகவும் ஆபத்தான தேவாலயம் என அழைக்கப்படுவது எத்தியோப்பியாவில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் அமைந்துள்ள அபுனா யெமாதா குஹ் தேவாலயம் ஆகும்.
செங்குத்தான மலை உச்சியில் அமைந்துள்ள இந்த தேவாலயத்துக்குச் செல்லும் பாதை பயங்கரமான சவால்களால் நிரம்பியுள்ளது.
எந்த பக்கம் பார்த்தாலும் 650 அடி உயரத்தில் நேராக கீழே இறங்கும் பாறைகள் மட்டுமே தெரியும்.
எத்தியோப்பியாவின் தெக்ரோ என்ற பகுதியில் இருக்கும் இந்த கோவிலுக்குச் செல்ல கைப்பிடி இல்லாத மலை விளிம்புகளில் ஏறவேண்டும்.
பாதி உடைந்து போன கற்பாலங்களைத் தாண்டிச் செல்லும் பயணம் எவ்வளவு ஆபத்தானதாக இருந்தாலும், பக்தர்கள் அங்கு செல்வதை நிறுத்தவில்லை. குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் நடத்தவும், இறந்தவர்களை அடக்கம் செய்யவும் பலர் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த தேவாலயம் கிபி 5ஆம் நூற்றாண்டில் எகிப்தைச் சேர்ந்த புனித யாமதா என்ற பாதிரியாரால் மலையைத் துளைத்துக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேகங்களின் நடுவே அமர்ந்து தனியாக வழிபட வேண்டும் என்ற விருப்பத்தாலும், சிலர் சொல்லும் படி, மத விரோதிகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ளவும் இவ்வாறு கட்டப்பட்டது என கூறப்படுகிறது.
கோவிலுக்குள் நுழைந்தவுடன் வண்ணமயமான சித்திரங்கள் கண்களை கவரும். இவை அனைத்தும் தேவதைகள், தேவதூதர்களை எடுத்துரைக்கும் ஓவியங்களாக அமைந்துள்ளன. நூற்றாண்டுகள் பல கடந்தும் இவை அசைவின்றி காட்சியளிக்கின்றன.
சில பாதிரியார்கள் 30-40 ஆண்டுகள் வரை இந்த மலையிலேயே வாழ்ந்து, கீழே இறங்காமல் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
இங்கு நின்று கீழே நோக்கும் போது பைபிளில் குறிப்பிடப்பட்ட நிலங்களைக் காணலாம். விளை நிலங்களின் மேல் மேகங்களின் நிழல்கள் நகர்வது, மேய்ச்சல்காரர்கள் மந்தைகளை மேய்ப்பது போன்ற காட்சிகள் கண்கொள்ளாக் காட்சியாக காட்சியளிக்கின்றன.
இன்றுவரை யாரும் இந்த கோவிலில் இருந்து கீழே விழுந்ததாக வரலாறு கூறுவதில்லை. ஆனால், சாவைத் தாண்டும் தைரியம் கொண்டவர்களுக்கே இந்த பயணம் சாத்தியம். அந்த ஆபத்தான பயணத்தையும் மீறி அங்கு அடைந்தவர்கள், சொர்க்கத்தைப் போன்ற ஆன்மிக அமைதியை அனுபவிப்பதாகச் சொல்லப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|