
பிச்சை எடுத்த பெண் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. இதுவரை எண்ணிய தொகை ரூ.9 லட்சம்!
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டை சுத்தம் செய்தபோது கிடைத்த பண மூட்டைகள்
மாண்டியா மாவட்டம் குத்தலு பகுதியில் ஹூர் உன்னிசா என்ற மூதாட்டி தனது சகோதரியுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது சகோதரி உயிரிழந்த நிலையில், அதன்பிறகு ஹூர் உன்னிசா தனியாக வசித்து வந்துள்ளார். வயது முதிர்வு காரணமான உடல்நலக் குறைவால் அவர் சமீபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது மரணத்துக்குப் பிறகு வீட்டை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றபோது, அங்கு சில பைகள் மற்றும் மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திறந்தவுடன் அதிர்ச்சி!
அந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது, அவற்றில் ஏராளமான ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக 10, 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
30-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் பணத்தால் நிரம்பியிருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்தப் பணத்தை எண்ணும் பணி தொடங்கியது.
இதுவரை எண்ணப்பட்ட தொகை எவ்வளவு?
கிடைத்த தகவலின்படி, இதுவரை எண்ணப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் 8 முதல் 9 லட்சம் ரூபாய் வரை இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இன்னும் சுமார் 20 பைகள் எண்ணப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அனைத்து பணமும் எண்ணி முடிக்கப்பட்ட பிறகே மொத்தத் தொகை எவ்வளவு என்பது தெரியவரும்.

பணம் யாரிடம் ஒப்படைக்கப்படும்?
கண்டெடுக்கப்பட்ட பணம் தற்போது உள்ளூர் மசூதியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூகத் தலைவர்கள் ஹூர் உன்னிசாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள் வந்த பின்னர், மீதமுள்ள பணம் எண்ணப்பட்டு, உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பிறகு அந்தத் தொகையை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
சமூக வலைதளங்களில் வைரல்
மூதாட்டியின் வீட்டில் இருந்து பணம் எடுக்கப்படும் காட்சிகள் மற்றும் பணம் நிரம்பியிருந்த பைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுத்து வாழ்ந்ததாக கூறப்படும் ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை சேமித்து வைத்திருந்தது குறித்து பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், இந்தப் பணத்தை அவர் எதற்காக சேமித்து வைத்திருந்தார், யாருக்காக சேர்த்து வைத்தார் என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
மீதமுள்ள பைகள் எண்ணப்பட்ட பிறகே இந்தச் சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் மொத்தப் பணத்தின் மதிப்பு குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




