
5,000 பரதநாட்டிய கலைஞர்கள், 10,000 சலங்கை அணிந்த கால்களின் கின்னஸ் உலக சாதனை!
கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் ஒன்றிணைந்து, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய பயிற்சி வகுப்பு (Largest Bharatanatyam Dance Lesson) என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளனர்.
காலி முகத்திடலில் (Galle Face Green) நடைபெற்ற இந்த நிகழ்வு, இந்தியாவின் சங்கமம் குளோபல் அகாடமி மற்றும் இலங்கையின் சங்கமிழ் லியா அமைப்பின் இணை ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

இலங்கை, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பரதநாட்டிய கலைஞர்கள் இதில் கலந்துகொண்டு, பாரம்பரிய கலை மற்றும் கலாசார மரபை கொண்டாடும் வகையில் ஒருங்கிணைந்த நடன நிகழ்வில் பங்கேற்றனர்.
பாரம்பரிய உடையணிந்த கலைஞர்கள், பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஒரே நேரத்தில் பரதநாட்டிய அசைவுகளை நிகழ்த்தியதன் மூலம் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் இடம்பெற்ற மதிப்பீட்டு செயல்முறையின் அடிப்படையில், கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
கலைஞர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் சார்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் Santosh Jha கின்னஸ் உலக சாதனை சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.
இதன்போது உரையாற்றிய அவர், இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய கலைஞர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் Ramalingam Chandrasekar மற்றும் பிரதி அமைச்சர்களான Sundaralingam Pradeep, Mahinda Jayasinghe ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சாதனை நிகழ்வை காண பெருமளவிலான பொதுமக்களும் காலி முகத்திடலில் திரண்டிருந்தனர்.
பரதநாட்டியத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதோடு, நாடுகளுக்கிடையிலான கலாசார பரிமாற்றம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாக இருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.





