
“மோசடி அல்ல… விவசாயிகளை முன்னேற்றவே நிறுவனம் தொடங்கினேன்” – சர்ச்சைகளுக்கு ரஞ்சித் பீரிஸ் விளக்கம்
இலங்கையில் வேளாண்மை மற்றும் தோட்ட மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கசகலா கிரீன் பிளாண்டேஷன்ஸ் (Kasagala Green Plantations) நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பீரிஸ் மற்றும் சாமுதித சமரவிக்ரம இருவருக்கும் இடையில் நடைபெற்ற ஓர் நேர்காணலின் தொகுப்பு:
அண்மைக் காலமாக பலராலும் பேசப்படும் ஒரு சர்ச்சைக்குரிய நபராக நீங்கள் இருந்துள்ளீர்கள். சிலர் உங்களை வெற்றிகரமான தொழில்முனைவோர் என்றும், மற்றவர்கள் மோசடி செய்பவர் என்றும் கூறுகிறார்கள். நீங்கள் உங்களை எவ்வாறு அடையாளப்படுத்த விரும்புகிறீர்கள்? என சாமுதித கேள்வி எழுப்புகிறார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கசகலா கிரீன் பிளாண்டேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பீரிஸ் கூறுகிறார், நான் ஒரு சிங்கள பௌத்த தொழிலதிபர். யாருடைய சொத்தையும் திருடுவது, பிறரின் உடைமையை அபகரிப்பது அல்லது ஒருவருக்கு துன்பம் ஏற்படுத்துவது எனது நோக்கம் அல்ல. கிராமப்புற மக்களையும், குறிப்பாக விவசாயிகளையும் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கத்துடன்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தேன். இன்று விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற முடியாமல் உள்ளனர். அதற்கு ஒரு தீர்வை வழங்குவதே எனது நிறுவனத்தின் நோக்கம்.
ஆனால், நீங்கள் மோசடியான வணிகம் நடத்துவதாகவும், உங்கள் நிறுவனம் பதிவு செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக சாமுதித கூறுகிறார்.
அது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. நாங்கள் விவசாயத் துறையிலான தொழிலையே மேற்கொண்டு வருகிறோம். எங்கள் நிறுவனம், நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாங்கள் நிதி நிறுவனம் அல்ல. அரசில் பதிவு செய்யப்பட்ட தோட்டக்கலை நிறுவனமாக செயல்படுகிறோம். மேலும், எங்களுடைய தோட்டங்கள் வலிமடை, மாத்தளை, வீரகெட்டிய மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. இங்கு குடைமிளகாய், இலவங்கப்பட்டை, மிளகு, ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட ஏற்றுமதி நோக்கமுடைய சிறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

இதன்போது, “நீங்கள் பயிரிடும் நிலங்கள் யாருக்கு சொந்தமானவை? மத்திய வங்கி தோட்டக்கலை முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யும்போது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறது. அந்த நிலையில், நீங்கள் மக்களிடமிருந்து எவ்வாறு பணம் பெறுகிறீர்கள்?” என்று சமுதித கேள்வி எழுப்பினார்.
பெரும்பாலான நிலங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமானவை. சுமார் 100 ஏக்கர் நிலங்கள் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளன. நிறுவனத்துக்குச் சொந்தமாக சுமார் 800 ஏக்கர் நிலங்கள் உள்ளன. மேலும் நாங்கள் வைப்புத் தொகைகளை ஏற்கவில்லை. பணச்சட்டத்தை மீறி நாங்கள் வைப்புத் தொகைகளை பெற்றிருக்கிறோமா என்பதைத்தான் மத்திய வங்கி ஆராய்கிறது. நாங்கள் நாற்றுகளை விற்பனை செய்கிறோம். வாடிக்கையாளர் நாற்றுகளை வாங்குகிறார். அதற்காக ஒரு ஒப்பந்தமும் உள்ளது. அந்த நாற்றுகளின் உரிமை வாடிக்கையாளருக்கே சொந்தமானது.
இதனைத் தொடர்ந்து, ‘நாற்றுகளுக்கான உரிமை மட்டுமே வழங்கப்படுகின்றது; நிலத்தின் உரிமை வழங்கப்படவில்லை. இருந்தாலும் பணம் செலுத்தப்படுவதால் இது ஒரு முதலீட்டுத் திட்டமாகவே தோன்றுகிறது அல்லவா? மேலும், மத்திய வங்கி தோட்டக்கலை முதலீட்டுத் திட்டங்கள் குறித்து மக்களை எச்சரிக்கிறது. அது உங்களுக்கு சிக்கலாக இல்லையா?’ என்று சமுதித கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ரஞ்சித் பீரிஸ், அந்தப் பணம் நாற்றுகளுக்காக செலுத்தப்படுகிறது. அந்த நாற்றுகளிலிருந்து கிடைக்கும் வருவாயை வாடிக்கையாளருக்கே வழங்குகிறோம். பலர் வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எங்களிடம் வருகிறார்கள். இதில் ஆபத்து இருக்கலாம் என்பதை அவர்கள் அறிந்தே அதிக லாபத்தை எதிர்பார்த்து செய்கிறார்கள். ஒருவர் 100 நாற்றுகளை வாங்கினால், மாதத்திற்கு சுமார் 35,000 ரூபாய் வருமானம் பெற முடியும். அந்த 100 நாற்றுகளின் மதிப்பு 5 இலட்சம் ரூபாய் என்று விளக்கமளித்தார்.
உங்கள் விற்பனை அதிகாரி ஒருவர், இன்று முதலீடு செய்தால் அடுத்த மாதமே வருமானம் கிடைக்கும் என்று எனக்குச் சொன்னார். அப்படியானால், இன்று வாங்கிய நாற்றுகளிலிருந்து அடுத்த மாதமே எப்படி வருமானம் கிடைக்கும்? என கேள்வி எழுப்பப்படுகிறது.
ஏற்கனவே விளைச்சல் தரும் தோட்டங்கள் எங்களிடம் உள்ளன. அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலமாக முதல் சில மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குகிறோம். புதிய நாற்றுகளிலிருந்து பொதுவாக 45 நாட்களில் அறுவடை கிடைத்தாலும், சந்தைப்படுத்த ஏற்ற நிலையை அடைய சுமார் மூன்று மாதங்கள் ஆகும். நிறுவனத்தின் ஏற்கனவே உள்ள தோட்டங்கள் மற்றும் பிற வருமான மூலங்களிலிருந்தே அந்த ஆரம்ப மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குகிறோம்.
இதனைத் தொடர்ந்து, “நீங்கள் கூறும் குடைமிளகாய் போன்ற விளை பொருட்களை ஏற்றுமதி செய்கிறீர்களா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இன்னும் ஏற்றுமதியை ஆரம்பிக்கவில்லை. தற்போது உள்நாட்டு சந்தையில் மட்டுமே விற்பனை செய்கிறோம். எங்கள் கணக்கீட்டின்படி, உள்நாட்டு சந்தையிலேயே இவ்வளவு வருமானத்தை ஈட்ட முடியும்.
இதற்கு எதிராக, “மற்ற விவசாயிகளால் செய்ய முடியாததை உங்களால் மட்டும் எவ்வாறு செய்ய முடிகிறது?” என்று சமுதித கேள்வி எழுப்பினார்.
எங்கள் வணிக மாதிரியும் அதன் செயல்பாட்டு அளவும் வேறுபட்டவை. அதனால் இதைச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நிறுவனத்தின் தற்போதைய வருமான மூலங்களிலிருந்தே ஆரம்ப மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குகிறோம். இல்லையெனில், பெரும்பாலானோர் இத்தகைய தோட்டக்கலைத் திட்டங்களில் இணைய விரும்ப மாட்டார்கள்’ என்று ரஞ்சித் பீரிஸ் தெரிவித்தார்.


