
அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் கட்டாயம்: விதிமுறை அமுல்
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகன பயணிகளுக்கும் சீட் பெல்ட் அணிவது தொடர்பான கட்டாய விதிமுறை ஜூன் 20 முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேசிய சாலை பாதுகாப்பு பேரவை அறிவித்துள்ளது.
தேசிய சாலை பாதுகாப்பு பேரவையின் தலைவர் மஞ்சுள குலரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன் இருக்கை மற்றும் பின் இருக்கை பயணிகள் அனைவரும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.
இந்த விதிமுறைக்கு பொதுமக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காக முன்னதாக சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது. அந்த சலுகைக் காலம் ஜூன் 19 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதன் பின்னர், ஜூன் 20 முதல் எந்தவித விலக்குகளும் இன்றி சீட் பெல்ட் அணியும் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய சாலை பாதுகாப்பு பேரவையின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் அனைத்து பயணிகளும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



