
இஸ்ரேல் – ஈரான் மோதல் முடிவுக்கு வரலாம்: டிரம்ப் நம்பிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முக்கிய உடன்பாடு விரைவில் எட்டப்படலாம் என தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை இரவு ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், “மிகவும் சிறந்த ஒப்பந்தம்” உருவாகி வருவதாகவும் கூறினார்.
மேலும், ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, அண்மையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்கு பின்னர், இஸ்ரேலும் ஈரானும் குறைந்தது ஒரு வார காலத்திற்கு மேலதிக தாக்குதல்களை தவிர்க்கக்கூடும் எனவும் டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டார்.
அமெரிக்காவின் தொடர்ச்சியான அழுத்தங்கள், குறிப்பாக கடற்படை முற்றுகை நடவடிக்கைகள், ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர உதவியுள்ளதாகவும், இராணுவ தாக்குதல்கள் மட்டும் தீர்வாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போர் தொடர்வது தொடர்பாக எச்சரிக்கை விடுத்ததாகவும், “விரைவில் நீங்கள் தனியாக இருக்க நேரிடலாம்” என்று தெரிவித்ததாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
தனது Truth Social சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், இரு தரப்பினரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியதுடன், இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், “அறியாமை அல்லது முட்டாள்தனம்” காரணமாக முன்னேற்றம் பாதிக்கப்படக்கூடும் என எச்சரித்துள்ளார்.
இந்த கருத்துக்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வெடித்த வன்முறைகளைத் தொடர்ந்து வெளியாகியுள்ளன. பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இதையடுத்து, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பெட்ரோ இரசாயன நிலையங்களை இஸ்ரேல் குறிவைத்து தாக்கியது. மறுபுறம், ஈரானும் ஹைஃபா பகுதியில் உள்ள முக்கிய கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேலிய விமானப்படை தளங்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு தரப்பினரின் தாக்குதல்களால் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



