
கொலைக்கு 34 நிமிடங்களுக்கு முன் ரகசிய அழைப்பு… புனே வழக்கில் புதிய அதிர்ச்சி
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார் புதிய முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
விசாரணையின்போது, முக்கிய குற்றச்சாட்டுக்குட்பட்ட சியா கோயல், கேதன் அகர்வால் கொல்லப்படுவதற்கு 34 நிமிடங்களுக்கு முன்பு தனது காதலரும் இணை குற்றவாளியுமான சேதன் சௌதரிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
போலீசாரின் தகவலின்படி, அந்த அழைப்பின் மூலம் லோகாட் கோட்டையில் இருந்த தனது இருப்பிடத்தை சியா கோயல் தெரிவித்ததுடன், அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லை என்பதையும் கூறி, திட்டமிட்டபடி நடவடிக்கையை மேற்கொள்ள சைகை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் நடைபெறுவதற்கு சில நொடிகள் முன்பு சியா கோயல் தரையில் அமர்ந்து தண்ணீர் குடிப்பது போல் நடித்ததாகவும், அதையே இணை குற்றவாளிக்கு முன்கூட்டியே ஒப்புக்கொண்ட சைகையாக போலீசார் கருதுகின்றனர்.
விசாரணையில், கொலை திட்டம் சம்பவத்திற்கு முந்தைய நாளே புனேவில் உள்ள ஒரு கஃபேவில் இறுதி செய்யப்பட்டதாகவும், அந்த சந்திப்பை உறுதிப்படுத்தும் கண்காணிப்பு கமெரா (CCTV) காட்சிகளும் போலீசாரிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்ட வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உரையாடல்கள்
கொலை சதியை மறைக்க சியா கோயல் மற்றும் சேதன் சௌதரி கடந்த மூன்று மாதங்களாக பரிமாறியதாகக் கூறப்படும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உரையாடல்கள் மற்றும் குரல் பதிவுகளை நீக்கியிருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நீக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்கும் பணியில் இணைய குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் முயற்சியும் தோல்வி
விசாரணையில், ஜூன் 14ஆம் தேதி கேதனை கொலை செய்ய முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது அவர் புதரைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. அந்தச் சம்பவத்தை பாம்பு பார்த்து தவறுதலாக தள்ளிவிட்டதாக சியா கோயல் விளக்கம் அளித்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விரைவு நீதிமன்றத்தில் விசாரணை
இந்த வழக்கில் சியா கோயல் மற்றும் சேதன் சௌதரி ஆகியோர் ஜூன் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். வழக்கை விரைந்து விசாரிக்க மகாராஷ்டிர அரசு விரைவு நீதிமன்றத்தை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், மூத்த வழக்கறிஞர் உஜ்வல் நிகம் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.




