
அரசு நிர்ணயித்த விலையை மீறி டிக்கெட் விற்பனையா? ‘ஜனநாயகன்’ வெளியீட்டில் புகார்!
முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் டிக்கெட் விற்பனை தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தஞ்சாவூர் மற்றும் நாமக்கல்லில் உள்ள சில தனியார் திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் திரையரங்கில், ஆன்லைனில் ரூ.200-க்கு டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு பின்னர் கூடுதலாக ரூ.740 செலுத்த வேண்டும் என்ற குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேரில் சென்று விளக்கம் கேட்ட ரசிகர்களிடம், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.740 என திரையரங்கு நிர்வாகம் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் குறித்து திரையரங்கு நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டபோதும், அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள ராயல் திரையரங்கிலும் டிக்கெட் விலை தொடர்பாக ரசிகர்களுக்கும் திரையரங்கு நிர்வாகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரூ.190 மதிப்புள்ள டிக்கெட்டுகள் ரூ.300 முதல் ரூ.800 வரை விற்கப்படுவதாக ரசிகர்கள் புகார் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த திரையரங்கு நிர்வாகம், “பட விநியோக நிறுவனம் கூறிய விலைக்கே டிக்கெட்டுகளை விற்கிறோம். சட்டப்படி ரூ.190-க்கே விற்க வேண்டும் என்பது எங்களுக்கும் தெரியும். மேலும், பட வெளியீட்டு அறிவிப்பு வெளியான நாளிலேயே சிலர் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி வெளியில் அதிக விலைக்கு விற்றனர். தற்போதும் அதே நோக்கத்தில்தான் சிலர் குறைந்த விலையில் டிக்கெட் கேட்கிறார்கள்” என்று விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சமரசப்படுத்தினர்.

இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில், “முதல்வர் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை முதல் நாளிலேயே பார்க்க ஆர்வமாக வந்தோம். மற்ற திரையரங்குகளில் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் கிடைக்கும் நிலையில், சில இடங்களில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ரசிகர்களே பாதிக்கப்படுகின்றனர்” என வேதனை தெரிவித்தனர்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில், சில திரையரங்குகளில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டதால், பல ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.



