
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டது – ஈரான் அறிவிப்பு
உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வ ஊடகம் அறிவித்துள்ளது.
ஈரானின் அரசாங்க கட்டுப்பாட்டில் செயல்படும் Press TV ஊடகம், நாட்டின் காத்தம் அல்-அன்பியா மத்திய கட்டளை தலைமையகத்தை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் மற்றும் வணிக கப்பல்கள் உள்ளிட்ட எந்தவொரு கப்பலும் பயணிக்க அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடையை மீறி பயணிக்க முயற்சிக்கும் கப்பல்கள் இலக்காகக் கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் விரோத நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஈரானின் தெற்கு மாகாணம் ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாடு சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்கா மறுப்பு
இதற்கிடையில், ஈரானின் இந்தக் கூற்றுகளை அமெரிக்க இராணுவம் நிராகரித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றிரவும் ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் வழக்கம்போல் உள்ளே மற்றும் வெளியே பயணித்து வருகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவொன்றில், “அமெரிக்க போர்க்கப்பல்கள் எதுவும் தாக்கப்படவில்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக சில ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களும் முற்றிலும் தவறானவை என அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான இந்த அறிவிப்புகள் சர்வதேச சந்தைகளிலும், மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.



