
இந்திய இசையின் இனிய குரல் ஓய்ந்தது: எஸ். ஜானகி காலமானார்
பன்மொழி பின்னணிப் பாடகியும், இந்திய இசை உலகின் ஜாம்பவானுமான இசைக்குயில் எஸ். ஜானகி காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகையும், இசை ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம் பல்லேபட்லா கிராமத்தில் பிறந்த எஸ். ஜானகி, தனது சிறுவயதிலிருந்தே இசைப் பயணத்தைத் தொடங்கினார். தனது நீண்டகால இசைப் பயணத்தில் 17 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவராக உயர்ந்தார்.

‘சிங்கார வேலனே தேவா’ உள்ளிட்ட ஏராளமான காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த அவர், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். மேலும் நடிகை ஸ்ரீதேவிக்காக ஐந்து மொழிகளில் பின்னணி குரல் கொடுத்த பெருமையும் அவருக்கு உண்டு.
1959ஆம் ஆண்டு ராம்பிரசாத்தை திருமணம் செய்துகொண்ட எஸ். ஜானகிக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே மகன் இருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மகன் உயிரிழந்த நிலையில், அதிலிருந்து சில மாதங்களிலேயே எஸ். ஜானகியும் காலமானது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரட்டை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்த எஸ். ஜானகியின் மறைவை அவரது பேத்தி உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய இசை உலகிற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய எஸ். ஜானகியின் மறைவு, இசை ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.



