
40,000 பாடல்களின் குரல்… எஸ். ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவிற்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
88 வயதான எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக காலமானார். தனது சிறுவயதிலிருந்தே இசைப் பயணத்தை தொடங்கிய அவர், 17 மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடி இந்திய திரையிசை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.

இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள எஸ். ஜானகி, பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றவர்.
முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர் என்றும், தனது இனிமையான குரல் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.



