புதிய அமெரிக்க விசா கொள்கை - மாணவர்களுக்கு அதிர்ச்சி
‘Anti-American’ சோதனை – இந்திய மாணவர்கள், தொழிலாளர்களுக்கு புதிய சவால்
அமெரிக்கா புதிய விசா கொள்கை - இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்களா?
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் குடியேற்றக் கொள்கையை மேலும் கடுமைப்படுத்தியுள்ளது.
புதிய உத்தரவின் படி, விசா மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள பதிவுகள் உட்பட அவர்களின் அமெரிக்கா குறித்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் சோதிக்கப்பட உள்ளது.
“Anti-American” சிந்தனைகள், கருத்துக்கள், அல்லது செயல்பாடுகள் கொண்டவர்கள் எதிர்காலத்தில் விசா பெறுவதற்கான வாய்ப்புகளை இழக்க நேரிடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
US Citizenship மற்றும் Immigration Services (USCIS) வெளியிட்ட தகவலில், அமெரிக்காவுக்கு எதிராக பேசுபவர்கள், தீவிரவாதக் குழுக்களை ஆதரிப்பவர்கள் அல்லது ‘anti-American ideologies’ கொண்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அமெரிக்காவில் வாழ்வதும், வேலை செய்வதும் ஒரு உரிமை அல்ல. அது ஒரு சிறப்புரிமை. அதனை மதிக்காதவர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படாது” என்று USCIS பேச்சாளர் Matthew Tragesser தெரிவித்துள்ளார்.
புதிய விதிகளின் படி, விண்ணப்பதாரர்கள் குடும்ப பிணைப்புகள், சமூக மரியாதை, குற்றச்செயல்கள், குடியேற்ற விதிமுறைகள் மீறல் உள்ளிட்ட அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படும். குறிப்பாக, யூத விரோத (antisemitic) கருத்துக்களையும், அமெரிக்க கலாச்சாரம் அல்லது அரசியல் அமைப்புக்கு எதிரான கருத்துக்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்திய மாணவர்களுக்கு இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், “anti-American” என்ற சொல்லுக்கு தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை. அதனால், யார் தகுதி இழப்பர் என்பது குழப்பமாகவே உள்ளது. இதனால், சமூக ஊடகங்களில் முன்பு பகிரப்பட்ட பதிவுகள் கூட விசா விண்ணப்பத்துக்கு இடையூறு செய்யக்கூடும்.
முன்னதாகவே, அமெரிக்க அரசு சுமார் 6,000 மாணவர் விசாக்களை ரத்து செய்தது. மேலும், மாணவர் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, அவர்கள் அமெரிக்க கலாச்சாரம், அரசியல் அமைப்பு மற்றும் தேசியக் கொள்கைகள் குறித்த பார்வைகள் முக்கியமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனத் தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த புதிய நடவடிக்கை, எதிர்காலத்தில் அமெரிக்காவில் கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவர்கள் மற்றும் வேலைக்கு விண்ணப்பிக்கும் தொழில்முறை நிபுணர்கள் மீது நேரடியாக தாக்கம் ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|